Skip to main content

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

tamilnadu government coronavirus prevention all shops and tasmac shops timing

 

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் மே 20ஆம் தேதி காலை 04.00 மணி வரை 15 நாட்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

 

அதன்படி, 50% வாடிக்கையாளருடன் மளிகை, பலசரக்கு, காய்கறிக் கடைகள் ஆகியவை மதியம் 12.00 மணி வரை மட்டுமே இயங்கும்.

 

தேநீர் கடைகள் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்த அனுமதி இல்லை.

 

விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கப்பட வேண்டும்.

 

அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் தவிர இதரக்கடைகள் அனைத்தையும் திறக்க மே 20ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மெட்ரோ ரயில்கள், தனியார் பேருந்துகள், டாக்சி ஆகியவற்றில் 50% பேர் மட்டுமே பயணிக்கலாம்.

 

வணிக வளாகங்களில் உள்ள பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள் ஆகியவை செயல்பட வரும் மே 20ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாயிரம் சதுர அடி கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடர்கிறது.

 

இறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்குப் பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

சமுதாயம், அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்கள் ஆகியவற்றை நடத்த மே 20ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

முழு ஊரடங்கு நாள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.

 

ஊரகப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், ஸ்பா போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரும் மே20 ஆம் தேதி வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

மீன், இறைச்சிக் கடைகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

 

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

 

உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

 

மருந்தகங்கள், பால் விநியோகம், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் காலை 08.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும். 

 

சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வரும் மே 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை. முன்களப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், ஊடகத்துறையினர் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்