Skip to main content

நியோமேக்ஸ் மோசடி வழக்கு; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Neomax  case; The judge warned the authorities

 

நியோமேக்ஸ் எனும் நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிலர் ஒருதலையாக உள்ளனர் எனச் சந்தேகம் வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘இதுவரை முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், ‘முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரதான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai High Court verdict on Sasikala's removal from ADMK will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

 

Next Story

“அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Karthi Chidambaram says Enforcement should be pulled and closed

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

 

அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால்,  பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.