/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sta333.jpg)
நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகேயுள்ளது உவரி. கடல் பகுதியைக் கொண்டதால், இங்கு கடல் மணலும் ஊரைச் சுற்றி சிகப்பு மணல் எனப்படும் தேரிக்காட்டுப் பகுதியாகவும் அமைந்துள்ளது. தோண்டத் தோண்ட மணல் வந்துகொண்டிருக்கும் பூகோள அமைப்பைக் கொண்டது.
உவரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் அப்பகுதியிலுள்ள மெயின் ரோடு அருகே வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்தக் கட்டுமானப் பணிக்காக அருகிலுள்ள நாகர்கோவிலின் பறக்கை பகுதியைச் சேர்ந்த 15- க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கியிருந்து வீடு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கட்டுமானப் பணியிலிருந்திருக்கிறார்கள்.
அது சமயம் ஒரு பிரிவைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கழிவு நீர்த் தொட்டி கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியின் மேலே பாறாங்கற்களை அடுக்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மணல் சரிந்ததோடு மேலிருந்த பாறாங்கற்களும் கீழே விழ இரண்டும் சேர்ந்து அவர் மணலின் உள்ளே சென்றுள்ளார். அவரது கழுத்து வரை மணல் சரிந்திருக்கிறது.
தொடர்ந்து சரிந்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த பிரவீன் கூக்குரல் கொடுத்திருக்கிறார். இதன் மொத்த ஆழம் சுமார் 15 அடி இருக்கும் என்கிறார்கள் கட்டுமானப் பணியாளர்கள். பிரவீன் மணலில் சிக்கிக் கொண்டதை அறிந்த சக தொழிலாளர்கள் பதறிப்போய் கத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியக் குமார், உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த் தலைமையிலான தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணி தாமதமாகத் தொடர்ந்து வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் பகுதியின் தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த அவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மணல் சரிந்து கொண்டே இருப்பதையறிந்து மணலில் புதையுண்ட பிரவீனைச் சுற்றி மேலும் மணல் சரியவே பெரிய ப்ளாஸ்டிக் அண்டாவின் அடிப்பகுதியை வெட்டியெடுத்து பிரவீன் தலைப் பகுதியில் பொருத்தி மேலும் அவர்மீது மணல் சரிய விடாமல் தடுப்பு அமைத்துக் கழுத்துப் பகுதியைப் பாதுகாத்தனர். இதனால் மணல் சரிவிலிருந்து சற்று பாதுகாக்கப்பட்டார்.
உச்சி வெயில் காரணமாக பிரவீன் சோர்வடைந்து போயிருக்கிறார். உடனே அவருக்கு குளுக்கோஸ் கலந்த நீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சர்க்கரைத் தண்ணீர் கொடுத்து அவரை சற்று தெம்பாக்கினர். தொடர்ந்து ஜெ.சி.பி. மூலம் அவரைச் சுற்றியுள்ள மணலை அகற்றிய பின்னர், ஒரு பெரிய ரோப் மூலம் அவரது இடுப்பில் கட்டி ஜெ.சி.பி மூலம் வெளியே தூக்க முயன்றனர். ஆனால், அவரை வெளியே இழுக்க முற்பட்டபோது, அம்முயற்சி தோல்வியடைந்தது.
இதனால் பதற்றமடைந்த வீரர்கள் ஜே.சி.பி. கொண்டு மணலைத் தோண்டிய பிறகுதான் தெரிந்திருக்கிறது, பிரவீனின் கால் பாறாங்கற்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட விஷயம். கால் வலியைத் தாங்க முடியாதவர் அரற்றியிருக்கிறார். அந்த நிலையில் மீட்புப் பணியைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின் கட்டுமானப் பணிக்குப் பயன்படும் ஒரு கரண்டியைக் கொண்டு அவர் மூலமாகவே காலில் பதிந்திருக்கும் மணலை அகற்றச் செய்தனர்.
தொடர்ந்து பிரவீன் தானே கரண்டி மூலம் மணலைச் சுரண்டிச் சுரண்டித் தள்ளிவிட, அவரது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. கால் சற்று நகர்ந்ததையறிந்து அவர் சிக்னல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஜெ.சி.பி. மூலம் கயர் கட்டி அவரைப் பத்திரமாக மீட்க முடிந்திருக்கிறது.
4 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி உயிரோடு மீட்கப்பட்டதால், பிரவீன் உடல் ரீதியாக மிகவும் களைத்துப் போயிருந்தார். தளர்ந்த நிலையிலிருந்த அவரை தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மணல் சரிந்து கொண்டிருக்கும் தேரிக்காட்டுப் பகுதியான இங்கே 15 அடி ஆழத்தின் மணல் சரிவில் சிக்கிக்கொண்ட வாலிபரை உயிருடன் மீட்டது அந்தப் பகுதியில் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. போராடிய தீயணைப்புப் படை வீரர்கள், அவர்களுக்கு உதவிய உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி உள்ளிட்டோரை உவரி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)