கடந்த 26 தேதியன்று குமரி மாவட்ட மணவாளக்குறிச்சியின் ஆறாம்விளைப் பகுதியின் சேக்சுலைமான் தன் உறவினர்கள் 10 பேர்களுடன் 2 வாகனங்களில் தூத்துக்குடியில் நடக்கும் தங்கள் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு வந்திருக்கிறார்கள். வாகனங்கள் நெல்லை மாவட்ட நாங்குநேரி டோல்கேட் பக்கம் வந்த போது, அங்கு சுங்கக் கட்டணம் செலுத்த கால தாமதமேற்பட்டிருக்கிறது. முகூர்த்த நேரம் போய் விடுமே என்ற எண்ணிய திருமணக் கோஷ்டியிலுள்ள சர்புதீன் டோல்கேட் ஊழியர்களிடம் நிலைமையைச் சொல்லி கட்டணத்தைத் தர முயன்றும், கால தாமதமேற்பட டோல்கேட் ஊழியர்களுடன் வாக்கு வாதம் ஏற்பட மோதலானது.
இதில் டோல்கேட் ஊழியர்கள் தாக்கியதில் சேக்சுலைமான்,சர்புதீன், அல்அமீது மனைவி சமீமா என பெண்கள் உட்பட 10 பேர்கள் படுகாயமடைந்தனர். 5 பேர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக டோல்கேட் ஊழியர் செல்வன் கொடுத்த புகாரில் நாங்குநேரி எஸ்.ஐ. சஜீவ், திருமணக் கோஷ்டியைச் சேர்ந்த சேக்சுலைமான்,திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் இருவரும் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
முன்னதாக நாம் எஸ்.ஐ.சஜீவிடம் இது குறித்து கேட்டதில் இரண்டு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர் எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது என்றார். ஆனால் ஒருதலைப்பட்சமாக பாதிக்கப்பட்ட திருமணக் கோஷ்டியினர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.