/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4971.jpg)
நெல்லை கலெக்டர் அரங்கில் வழக்கம் போல் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதுசமயம் மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சி சமீபமாக உள்ள வைராவிகுளத்தைச் சேர்ந்த வள்ளியம்மை (70) என்ற மூதாட்டி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த நிலையில், அரங்கின் ஒரு பகுதியில் திடீரென தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்து தற்கொலைக்கு முயன்றது கண்டு பதறிப்போன அங்கிருந்த மக்கள் கூச்சலெழுப்பினர்.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். அதன் காரணமாக மூதாட்டி வள்ளியம்மை உடனடியாக கண்ணைத் திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டார்.
அதன்பிறகு அந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், “என் மகள் முருகம்மாள் மணிமுத்தாறின் மீன் பண்ணையில் வேலை செய்து வருகிறார். அவர் அரசு வேலைக்காக வெளிநபர்களிடம் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனா கடன் கொடுத்தவங்க என்னோட விளை நிலத்தைப் பறிக்க முயற்சி பண்ணுதாக. நா பயிர் வைக்க முடியல. போலீஸ் அதிகாரிக கிட்ட மனு குடுத்தோம் நடவடிக்கையில்ல. என்னோட நிலத்தில நா பயிர் வைக்கனும். அதனால கலெக்டரய்யாட்ட மனு குடுக்க வந்தேன். என்னோட நெலமயப் பாத்து கலெக்டர் ஆபீஸ் வெளிய மனு எழுதிக் கொடுத்த ஒரு பெண், ‘பாட்டி, வெறுமன மனுக்குடுத்தா நடவடிக்கையிராது. நீ தீக்குளிப்பது போல நாடகமாடு அப்பத்தான் மனு வேல செய்யும்’ என்று சொன்னதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் மூதாட்டி வெள்ளந்தியாகத் தெரிவித்திருக்கிறார்.
அதன் பின் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே மனு எழுதிக் கொடுக்கிற கொக்கிரகுளத்தின் தங்கம் (45) என்பவரைப் பிடித்து பாளை போலீசார் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை தற்கொலை முயற்சிக்கு நாடகமாட தூண்டியது தெரியவரவே அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். நமக்கு பரிகாரம் கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கையில் ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனுகொடுக்க வருகிறார்கள் மக்கள். தொடர்ந்து தொடர்புடைய அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் நடவடிக்கையில்லையே என்கிற ஆதங்கத்திலும் வேதனையிலும் மனுபோராட்டம் நடத்துகிற மக்களில் சிலர், விரக்தியில் சில விரும்பத்தகாத சம்பவமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவதுண்டு. அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவர்களைத் தடுத்துக் காப்பாற்றுவதற்காகவே அங்கு பாதுகாப்பு பணியிலிருக்கும் போலீசார் அவர்களைச் சோதனையிட்ட பின்பே ஆட்சியர் அரங்கிற்குள் அனுப்பி வைக்கின்றனர்.
அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் மனுக்கள் பரபரப்பான பின்பே, அதற்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன எனும்வேதனை மக்களின் மனதில் பதிவதுண்டு. அதன் விளைவே இது போன்ற சம்பவங்கள். நெல்லை ஆட்சியர் அலுவலகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எப்படி தெரிவிப்பது என்பதையறியாமல் அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை விரிவாக அவர்களுக்கு மனு எழுதிக் கொடுத்து அவர்களிடமிருந்து பெறும் கூலியின் மூலம் தங்கள் குடும்பங்களை காப்பாற்றுபவர்கள் ஏராளம். தமிழகத்தின் அத்தனை ஆட்சியர் அலுவலகம் முன்பும் இதே நிலைதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)