Skip to main content

குழந்தையை ஒப்படைப்பதில் அரசு மருத்துவமனை அலட்சியம்; ஊழியர் பணியிடை நீக்கம்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Negligence of government hospital in handing over baby

வட சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மசூத் - சௌமியா தம்பதியினர். இதில் சௌமிய கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திடீரென சௌமியாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கன்னிகாபுரம் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் சாலையில் தண்ணீர் இருந்ததால் சௌமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்பதால் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீன்பாடி வண்டி உதவியுடன் குழந்தை முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சௌமியாவையும், குழந்தையையும் கொண்டு சென்றனர். அங்கு சௌமியாவிற்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளித்துள்ளனர். 

பின்னர் இறந்த குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறந்த குழந்தையை துணியால் சுற்றி கொடுக்காமல், மருத்துவமனை பிணவறை ஊழியர் அட்டைபெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில், அரசு மருத்துவமனையின் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பிரேத பரிசோதனை செய்தால் உடல் முழுவதும் வெள்ளை துணிகளை கட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் குழந்தையின் உடலை துணிகள் வைத்து சுற்றித்தர வேண்டும் என கேட்டிருந்தால் நாங்கள் சுற்றிக் கொடுத்திருப்போம். அவர்கள் எதையும் கேட்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்துகளில் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Minister Udayanidhi started a new facility in government buses

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் இதன் மூலம் பயணிகளிடம் ரொக்கப் பணம், ஏடிஎம் அட்டை, கடன் அட்டை மற்றும் யூபிஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  இணை மேலாண் இயக்குநர் .க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், அரசு உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் தடை!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Veeranam Lake dried up without water supply, so forbidden to send water Chennai

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.