Skip to main content

“நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல..” - அன்புமணி

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

NEET Jagadeeswaran issue anbumani tweet
கோப்புப் படம் 

 

“நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி  ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

 

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது  மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இதுதான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

 

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு, எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்? நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்துவிட்ட தேர்வு. அதைத் தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில்,  அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

 

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

 

அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள், நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதல்வருக்குத் தெரியுமா? என்றே தெரியவில்லை” - ராமதாஸ்

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
 Ramadoss condemns pmk figure incident

பா.ம.க நிர்வாகியான சிவசங்கர், நேற்று மாலை (06-07-24) தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி சங்கர், அதே பகுதியைச் சேர்ந்த நால்வரால்  கொடூரமாக வெட்டப்பட்டிருக்கிறார். பா.ம.க. நிர்வாகி மீதான இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உடல் முழுவதும் காயமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சங்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காவல்துறையின் அலட்சியமும், செயலின்மையும் தான் காரணம் ஆகும். பா.ம.க. நிர்வாகி சங்கரின் சகோதரர் பிரபு என்பவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான சங்கரை நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிக்கக் கூடாது என்று கொலையாளிகள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் சங்கர் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததும், சங்கருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததும் தான் கொலை முயற்சி தாக்குதலுக்கு காரணம் ஆகும்.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அ.தி.மு.க நிர்வாகி புஷ்பநாதன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தான் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அச்சத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாகவே பா.ம.க. நிர்வாகியை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது கடலூர் மாவட்ட காவல்துறையின் தோல்வியையே காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறை அதன் தவறை ஒப்புக்கொள்ளாமல், கொலைமுயற்சிக்கு ஆளான சங்கரும், அவரை கொலை செய்ய முயன்றவர்களும் வன்னியர்கள் தான் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு இந்த வழக்கின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயல்வது அருவருக்கத்தக்க செயலாகும்.

சென்னையில் தொடங்கி  நெல்லை வரை தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைகளும், கொலைமுயற்சிகளும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. தமிழக அரசும், காவல்துறையும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரை கொலை செய்ய முயன்றவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 
 

Next Story

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Scythe cut to a pmk figure in Cuddalore

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை(6.7.2024) மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள்  இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்பொழுது சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயம் உள்ள நிலையில் அவருக்கு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சங்கரின் ஆதரவாளர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையிலும் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் தம்பி பாமக பிரமுகர் பிரபுவை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சதீஸ், தங்கபாண்டியன், வெங்கடேசன் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் பிரபுவின் அண்ணன் சங்கர். இதனால் இவர் இன்று வெட்டி படுகொலை செய்ய இருந்ததாக போலீசாரின் விசாரணையில் முதற்கட்ட தகவலாக உள்ளது.