நீலகிரி மாவட்டத்தில் உள்ளுர் வாகனங்கள் இயங்க அனுமதி கிடைத்திருக்கிறது. ஆனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாங்கள் வியாபாரத்தால் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லாமல் தவிக்கிறோம். இந்த ஊரடங்கு தளர்வால் எங்களுக்கு எந்த பலனும் இ்ல்லை.
இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு ஆண்டிற்கு சுமார் பத்து லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் 5 முதல் 6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த கரோனா தொற்று பரவலால் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால், சுமார் முன்னூறு கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. சாலை ஓர வியாபாரிகள் முதற்கொண்டு ஷாப்பிங் மால் வியாபாரம் வரை முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதால் லட்ச கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் குளு குளு கால நிலையினை அனுபவிப்பதற்காகவும், இங்குள்ள தாவரவியல் பூங்கா,,சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா, சூட்டிங் ஸ்பாட், லேம்ஸ் ராக், டால்பினோஸ், உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
ஆனால் இப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், உள்ளூர் வாகனங்களை இயக்கவும், தங்கும் விடுதிகளை திறக்க அனுமதித்தாலும் சுற்றுலா வாகனங்கள் அனுமதியில்லை என்பதால் என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்பவர்கள்.
நீலகிரி மாவட்டம் கர்நாடகா,கேரளா, எல்லைகளை ஒட்டியுள்ளதாலும், சுற்றுலா பயணிகள் வருகையின்போது தனிமனித இடைவெளியினை கடை பிடிப்பது கடினம் என்பதாலும், கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முதல் இரண்டாம் சீசன் துவங்கவுள்ளது.
இந்த கால கட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை, ஹோம் மேட் சாக்லட் கடைகள், வருக்கி, நீலகிரி தைல உற்பத்தியாளர்கள், ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், மேக்ஸி கேப்கள், நூற்றுக்கணக்கான கைடுகள் என பலரின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளது. சுருக்கமாய் சொன்னால்.. “கடை விரித்தோம்... கொள்வாரில்லை...” என்கிறார்கள் நீலகிரி மாவட்ட வியாபாரிகள்.