Skip to main content

40 நாட்களில் 10 புலிகள் உயிரிழப்பு; தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

National Tiger Commission hearing today

 

நீலகிரி மாவட்டத்தின் வனத்தை ஒட்டிய பகுதிகளில் கடந்த 40 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட புலிகள் உயிரிழந்தது வனத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்மையில் நீலகிரி அவலாஞ்சி பகுதியை ஒட்டியுள்ள நீர் நிலையில் ஒரு புலியும் அதனை ஒட்டிய வனப்பகுதியில் மற்றொரு புலியும் உயிரிழந்து கிடந்தது. அதே நேரம் மாடு ஒன்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் உயிரிழந்து கிடந்ததால் மனிதர்கள் யாரேனும் வேட்டையாடும் நோக்கில் விஷம் வைத்திருக்கலாம் என வனத்துறை சந்தேகித்தது. அதேபோல் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 2 புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இப்படிக் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்த நிலையில், இன்று தேசிய புலிகள் ஆணையக் குழு விசாரணை நடத்த இருக்கிறது. நீலகிரியின் எமரால்டு, நடுவட்டம், கார்குடி வனப்பகுதிகளில் புலிகள் இறந்த இடத்தில் இந்தக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்த உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குள்ளநரி கறி விருந்து; கம்பி எண்ணும் இளைஞர்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Youth arrested under Wildlife Protection Act in trichy

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வயலூர் அருகே இனாம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இத்தனிப்படையினர், கடந்த நவம்பர் 29 அன்று இனாம்புலியூர் கிராம தெற்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சி. லட்சுமணன் என்பவரின் மகன் ல. அய்யர் (26) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இது குறித்து அய்யரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம்புலியூர் கிராம காட்டுப் பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு, தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 

 

அதனைத் தொடர்ந்து அய்யர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அய்யரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அய்யர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

Next Story

கொடநாடு வழக்கு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Koda Nadu case report handed over to the court

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் ஆய்வின் முடிவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் உதகை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.