ஊரடங்கு உத்தரவால் சாலையோரங்களில் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் மற்றும் நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. தினம் தினம் உழைத்து கிடைக்கும் சிறிதளவு பணத்தைக் கொண்டே வயிற்றை நிரப்பியவர்கள் தற்போது பசியின் கோரத்தினால் கொலை பசியின் வேதனையில் இருக்கிறார்கள்.
முகநூலில் எங்களுக்கு உதவுங்கள் இல்லை ஹீட்லர் யூதமக்களைக் கொன்றது போன்று கொன்று விடுங்கள். நாங்கள் பசியில் உயிரோடு சாகிறதை விட உங்கள் கையில் சாகிறோம் என்கிற கதறலை கேட்டவுடன் அது எந்த பகுதி என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.

தஞ்சை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி காலனியில் உள்ள நரிகுறவர் காலனியில் இருந்து நாங்கள் உண்ண உணவின்றித் தவித்து வருகிறோம் எங்களைக் கொன்று விடுங்கள் என்ற கதறல் சத்தம் கேட்டது.

என்னாச்சு அரசாங்க உதவி எதுவும் வரவில்லையா என்று அந்த ஊரின் முக்கியஸ்தர் சுரேஷிடம் இது குறித்து பேசினோம். அவர், இந்த கரோனாவில் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பேரழிவில் எங்கள் இனமே அழிந்து விடும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் சுமார் 67 கிராமங்கள் உள்ளது. ஆனால் அதில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களோ, உதவி என்றோ எதுவுமே எட்டிக்கூட பார்க்கவில்லை. எங்களை மனிதர்களாக கூட நினைக்கவில்லை போல,

அதிலும் எங்கள் கிராமம் முக்கியமான கிராமம். இந்த ஊரில் 80 குடும்பங்கள் இருக்கிறோம். ஆனால் ரேசன் கார்டு கணக்கில் 35 குடும்பத்திற்கு மட்டும்தான் உள்ளது. மீதி குடும்பங்களுக்கு ரேசன் கார்டு கொடுங்கள் என பல முறை கேட்டும், எங்களை கணக்கில் காட்டாத குடும்பங்களாக இப்ப வரைக்கும் காட்டி வருகிறார்கள்.
எப்போதும், திருவிழாக்கள் நடந்தால் அங்கு சென்று சின்னச் சின்ன பொருட்களை விற்று எங்கள் குழந்தைகள், எங்கள் பசியைப் போக்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் இந்த ஊரடங்கிற்குப் பின் வாழ்நாளில் எந்த சேமிப்பும் இல்லாத எங்களுக்கு எந்த பிழைப்பும் இல்லாமல் இனி பிழைக்கவே வாய்ப்பே இல்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கோம்.
ஊரடங்கு அமலுக்கு வந்தவுடன் பசியின் கொடுமையில் நாங்கள் கொஞ்சம், கொஞ்சமாக வாட ஆரம்பித்தோம். அப்போது எங்களை தேடி சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மாத்தூர் தாய் சமூக நல அறக்கட்டளை, ரெட்கிரஸ், குழந்தைகள் நல வாரியத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் காய்கறிகள் கொடுத்தனர்.

அடுத்த எதிர்கட்சியான திமுகவின் எம்.எல்.ஏ திருவையாறு துரைசந்திரசேகரன் கட்சிகாரர்களுடன் வந்து 5 கிலோ அரிசி, காய்கறி பொருட்கள் கொடுத்தாங்க, அதுவும் 35 குடும்பத்திற்குக் கொடுத்தாங்க நாங்க அந்த அரிசியை 80 குடும்பங்களும் பகிர்ந்து எங்கள் வயிற்று பசியைத் தற்காலிகமாக நிவர்த்தி பண்ணினாங்க., ஆனா அரசாங்கத்தின் சார்பில் இன்னும் எந்த உதவியும் இல்லாமல் தவித்து வருகிறோம்.

மாவட்டத்தின் எல்லையில் இருப்பதால் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். எங்களை அப்படியே உயிரோ சாவடித்து விடுவார்களபோல என்று கதற ஆரம்பித்தார். இதுவரை எந்த அரசாங்க அதிகாரிகளுக்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. பசியின் கொடுமையினால் தவிக்கும் நரிக்குறவர்களின் கண்ணீர் கதறல் தமிழக அரசின் காதுகளில் கேட்டு நிவாரணம் கிடைக்க வேண்டும். கவனிக்குமா தமிழக அரசு!