தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாகிவிட்ட நிலையில் கடத்தல் போதைப் பொருட்கள் பிடிபட்டு வருகிறது. இந்த வகையில் புதுக்கோட்டை - ராமநாதபுரம் எல்லைப் பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய், லேகியம் ஆகியவை இலங்கைக்கு கடத்த தயாராக உள்ளது என்ற தகவல் கிடைத்து திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அமீர்சுல்தான் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் உப்பளம் அருகே ஒரு தனியார் இறால் பண்ணையை 6 மாதத்திற்கு முன்பு குத்தகைக்கு பெற்று அந்தப் பண்ணை குளத்தில் தண்ணீரோ, இறால் குஞ்சுகளோ விடாமல் உள்ளார். ஆனால் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்கள் வந்து செல்லும் தகவலறிந்து அந்த இறால் பண்ணையில் உள்ள கொட்டகையை சோதனை செய்தபோது கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து நின்றனர்.
காரணம், அந்த கொட்டகையில் ரூ.110 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட லேகியம் பண்டல்கள் மற்றும் மூட்டை மூட்டையாக 824 கிலோ கஞ்சா பண்டல்களும் கண்டுபிடித்தனர். கூடவே சாராய ஊறல் ஒரு பேரலும் அழிக்கப்பட்டது. இறால் பண்ணையில் இருந்த காவலாளி அரசநகரிப்பட்டினம் முசிபுர் ரகுமான் உட்பட 3 பேரை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் போதைப் பொருள்களையும் கைப்பற்றி ராமநாதபுரம் கொண்டு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை மணமேல்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று இன்று புதன்கிழமை புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இறால் பண்ணையில் கைப்பற்றப்பட்ட ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை ஒப்படைத்தனர். இந்த தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் 3 பேரை பிடித்து விசாரணை செய்து வரும் நிலையில், இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் விரைவில் அவர்களையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.