நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 50 கிலோ கஞ்சாவுடன் ஆறுமுகம் என்பவரை போலிசார் கைதுசெய்து ரகசிய விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தான் தனக்கு கஞ்சா வருவதாகக் கூறியுள்ளார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான குழுவினர் ஆறுமுகத்தை 'பொறி'யாகப் பயன்படுத்தி 'தனக்கு மேலும் 200 கிலோ கஞ்சா வேண்டும் புதுக்கோட்டையில் வந்து வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கிறேன்' என்று பேச வைத்துள்ளனர்.
தொடர்ந்து கஞ்சா பண்டல்கள் மாற்றப்பட வேண்டிய இடங்களையும் உறுதி செய்து கொண்ட நாமக்கல் போலிசார், புதுக்கோட்டை வந்து வெள்ளனூர் காவல் சரகத்தில் உள்ள சிப்காட் அருகே ஒரு டாடா ஏ.சி.இ வாகனத்துடன் ஆறுமுகத்தை காத்திருக்கச் சொல்லிவிட்டு போலிசார் மறைந்திருந்தனர்.
ஆறுமுகம் சிப்காட்டில் வந்து காத்திருப்பதை உறுதி செய்து கொண்ட புதுக்கோட்டை நபர், ஃபோர்டு காரில் கஞ்சா பண்டல்களை ஏற்றிக் கொண்டு வந்து ஆறுமுகம் காட்டிய டாடா ஏ.சி.இ வாகனத்தில் மாற்றிக் கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலிசார் மடக்கிப் பிடித்து 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா வியாபாரியான அரிமளம் அருகில் உள்ள சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த பத்பநாபன் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 49) என்பவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆரோக்கியதாஸ்
ஆரோக்கியதாஸிடம் செய்த விசாரனையில் ஆந்திராவிலிருந்து வாங்கி வந்த கஞ்சா பண்டல்களை திருமயம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மனைவி மாரிக்கண்ணு (வயது 45) என்பவர் வீட்டில் பல நாட்களாக பதுக்கி வைத்திருந்து, தற்போது எடுத்து வந்ததாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக மாரிக்கண்ணுவும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார்.
ஆனால், ரகசியமாக வந்த நாமக்கல் போலிசார் ரகசியமாகப் பிடித்துக் கொண்டு நாமக்கல் சென்றுள்ளனர். தகவல் அறிந்து புதுக்கோட்டை போலிசார் விசாரணைக்காக மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை வழியாக கஞ்சா, தங்கம் கடத்தல் தொடர்ந்து நடப்பதால் இந்த கஞ்சாவும் கடற்கரை பகுதியில் இருந்து வாங்கி வந்ததா? என்றும் மேலும் இவர்களுடனான தொடர்புகள் குறித்தும் புதுக்கோட்டை மாவட்ட போலிசார் ரகசிய விசாரனை செய்து வருகின்றனர். சரியான விசாரணைக்குப் பிறகு கடலோரத்தில் மொத்தமாகவும் சில்லரையாகவும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் பெண் உள்பட பலர் சிக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் இளைஞர்களைச் சீரழித்த போதை மாத்திரை, போதை ஊசி விற்ற கும்பலை சங்கிலித் தொடர் போல சென்று பலரை கைது செய்து ஏராளமான இளைஞர்களைக் காப்பாற்றினார். அதே போல, தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கஞ்சா கும்பல் நெட்வொர்க்கை முழுமையாகப் பிடித்து கஞ்சா இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டையை மாற்றுவார் என்கிறார்கள் போலிசார்.