சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட ராசிபுரம் செவிலியர் உதவியாளர் அமுதா, குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலமாக போலியாக பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதாகவும், அதற்காக 70 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் ஒரு தம்பதியிடம் பேசிய உரையாடல் சமூக ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, ராசிபுரம் நகராட்சி மூலம் கடந்த 2016-2017, 2017-2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்புச்சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த அலுவலகம் மூலம், மேற்சொன்ன கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 4500 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல் கொல்லிமலையில் மட்டும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 1000 பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று தணிக்கை செய்து வருகின்றனர். இவற்றில் முதல்கட்டமாக 20 பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர்கள் வசம் இல்லாத அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.