கிராமங்களில் ஏழை விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளிகள் தங்கள் குடும்ப வறுமையைப் போக்க ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்ப்பது வழக்கம். விளை நிலமே இல்லாத ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரம் ஆடு, மாடு, கோழிகள் தான். பல குடும்பங்களில் கால்நடைகளை வளர்த்தே குழந்தைகளைப் படிக்க வைக்கவும் திருமணங்கள் செய்து கொடுக்கவும் செய்துள்ளனர். ஒரு கறவை மாடு வைத்துக்கொண்டு மொத்தக் குடும்ப பாரத்தையும் சுமக்கும் எத்தனையோ ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள்.
இப்படி ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் ஆடு, மாடு, கோழிகளைத் தான் சில ஆண்டுகளாகத் தெரு நாய்கள் கடித்துக் குதறி அந்த குடும்பங்களையே நிலைகுலையச் செய்து விடுகிறது. இப்படி வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்கள் ஏராளம். இப்படி ஒரு குடும்பத்திற்குத் தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆடுகளை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு குருந்தடிப்புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் மனைவி ராசாத்தி. கூலி வேலைக்குச் செல்லும் இவர்கள் வீட்டில் 8 வெள்ளாடுகளை வளர்த்து வந்தனர். கடந்த 4ந் தேதி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஒரு தோட்டத்தில் கட்டியிருந்தனர். அந்தப் பக்கமாக வந்த நாய்கள் 8 ஆடுகளையும் கடித்துக் குதறிப் போட்டிருந்தது. இதனைப் பார்த்த ராசாத்தி கதறி அழுதார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நாய் கடித்துப் பலியான 8 ஆடுகளையும் தூக்கி வந்து சாலையில் போட்டு சாலை மறியல் செய்தனர். கடந்த சில மாதங்களில் வடகாடு பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றுள்ளது. அந்த நாய்களைப் பிடிக்க வேண்டும். ஆடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருந்தனர்.
ஒரே நேரத்தில் தங்கள் குடும்பத்தில் மொத்த ஆடுகளையும் கொன்று வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டதே தெரு நாய்கள் என்று முடங்கிவிட்டனர். இதனையறிந்த வடகாடு நாம் தமிழர் கட்சியினர் அவர்களது சார்பில் நிதி திரட்டி, அந்த ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக முதல்கட்டமாக 4 வெள்ளாடுகளை வாங்கி ஆலங்குடி தொகுதிச் செயலாளர் ராஜாராம், மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன், முருகேசன், தொகுதி பொருளாளர் தமிழரசன் ஆகியோர் ராசாத்தி குடும்பத்திற்கு வழங்கினார்கள். இவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.
வடகாடு சுற்று வட்டார கிராமங்களில் ஆடுகள் திருட்டு பயம் ஒரு பக்கம், தெருநாய்களின் தொல்லை மறுபக்கமாக உள்ளது. இது போல நாய்கள் கடித்துக் கொல்லும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் இந்தக் கால்நடைகளை மட்டுமே நம்பி வாழும் எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதாக இருக்கும். வடகாட்டில் மட்டும் 5க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் 20க்கும் மேற்பட்ட ஆடுகளைத் தெரு நாய்களுக்குப் பறிகொடுத்துவிட்டுப் பரிதவித்து நிற்கிறார்கள்.