
தமிழ்நாட்டில் பீங்கான் தொழிலுக்காக உள்ள ஒரே பீங்கான் தொழிற்பேட்டை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கி வந்த அரசின் தொடர் சுரங்க சூளை நிர்வாக குளறுபடிகள் காரணமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த தொடர் சூளையை மீண்டும் இயக்குவதற்காக தமிழ்நாடு அரசு இரண்டரை கோடி ரூபாய் நிதி, இரண்டு தொழிற்கூடங்கள், 3 ஏக்கர் நிலம் என 20 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஒதுக்கியது. ஆனால் இந்த நிதி மற்றும் சொத்துக்கள் ஓரிரு தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பீங்கான் உற்பத்தியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து நமது நக்கீரன் 2022 ஜூலை 30-ஆகஸ்ட் 02 இதழில் " அரசு நிதி! விரக்தியில் பீங்கான் உற்பத்தியாளர்கள்!" என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதன் எதிரொலியாக இன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வே.கணேசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், சிட்கோ நிர்வாக அதிகாரிகள், பீங்கான் உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அரசு செயலர் அருண்ராய் தலைமை தாங்கினார். சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆனந்த், சார் ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பீங்கான் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பீங்கான் தொழிற்பேட்டையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினர். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சுடு சுரங்க சூளை (கில்லன்) கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இதன் மூலமே குறைந்த செலவில் பீங்கான் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வந்த நிலையில் மூடி கிடக்கும் சுடுகில்லனை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து பீங்கான் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பில் பேசியவர்கள், " பீங்கான் தொழிற்பேட்டையில் தொழில்கள் செய்ய பீங்கான் உற்பத்தி தொழிலில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், அரசின் தொடர் சுரங்க சூளையை மீண்டும் இயக்குவதற்கான பொருளாதார நிதி உதவியையும், தொழில் கூடங்களையும், நிலங்களையும் ஒரு சில தனி நபர்களுக்கு மட்டும் வழங்கக் கூடாது. பீங்கான் தொழிலில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்துக் கூட்டு நிறுவனமாக நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், பீங்கான் மற்றும் ரெப்ராக்டரீஸ் தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்கள் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், தனிநபர் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி, நெறி முறைப்படுத்தி அனைத்து தொழில் முனைவோர்களும் பயன்பெறும் வகையில் நிர்வாகம் சீர்படுத்தி தரப்படும் என அமைச்சர்கள் கூறினர். அதன் பின்னர் தொடர்ந்து பீங்கான் தொழிற்பேட்டையில் உள்ள சுடுகில்லனை ஆய்வு செய்து கில்லனுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். பின்பு தொழிலாளர்கள், சிறு, குறு பீங்கான் உற்பத்தியாளர்களிடத்திலும் அமைச்சர்கள் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தனர்.