பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபாலை போலீசார் இன்று (9-10-2018) காலையில் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக விவகாரங்கள் தொடர்பாக உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளிடம் பேசியதை முதன்முதலில் வெளியிட்டது நக்கீரன் இதழ். அதன் தொடர்ச்சியாக, அந்த ஆடியோ விவரம், வழக்கு விசாரணை எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது குறித்து, ஆளுநர் மாளிகை அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புனே விமானத்திற்குச் செல்வதற்காகக் காத்திருந்த நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபாலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுநரின் பணிகளில் தலையிட்டு இடையூறு செய்ததாகக் குற்றம் சுமத்தி, தேசத் துரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் முயற்சி தீவிரமைடந்துள்ளது.
நிர்மலாதேவி விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து-சிறையில் அடைத்து- அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில் அதனை செய்தியாக வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்வதை ஊடகத் துறையினர் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன், ஆளுநர்-ஆட்சியாளர்கள் கூட்டணியில் பத்திரிகை சுதந்திரம் படுகொலை செய்யப்படுவதாக அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.