நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு, வலைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்து நாசம் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் கீழபட்டினச்சேரி மற்றும் மேலபட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கு இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு மற்றும் மோதல் நிலவி வருகிறது. இடையில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்வுக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து மீனவர்கள் வழக்கம்போல் தொழிலுக்கு சென்றுவந்தனர்.
இந்த நிலையில், 6ம் தேதி இரு கிராமங்களுக்கு இடையே மீண்டும் மோதல் உண்டானது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பானது. இரு தரப்பு மீனவர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் கைது செய்தனர். மேலும், அந்த கிராமங்களில் பதற்றத்தை குறைக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழபட்டினசேரியைச் சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். சுவாலையாக எறிந்த தீயில் பைபர் படகும் அதில் இருந்த வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
துறைமுகத்தில் திரண்ட மீனவ பெண்கள் எரிந்த படகை கண்டு கதறி அழுதனர். அப்போது படகுக்கு தீ வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலபட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய கீழபட்டினச்சேரி கிராம மீனவர்கள், படகை எரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள்.