நாகை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்த நாகை எம்.பி செல்வராஜின் வாகனத்தை வழி மறித்த நபர்கள், கூச்சலிட்டதோடு எம்.பி மீது கத்தியை வீசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் செல்வராஜ். இவர் நாகை தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் உள்ள ஸ்தியம்பள்ளி காளியம்மன் கோயில் முன்பு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வாகனத்தின் முன்பு குடிபோதையில் நின்றிருந்த மூன்று பேர் எம்.பி செல்வராஜை பார்த்து கூச்சலிட்டனர். அந்த நபர்கள் "இங்க உள்ள தண்ணீர் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றும், உங்களால் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க முடியவில்லை என்றும், ஆனால் நன்றி மட்டும் தெரிவிக்க வந்திட்டுங்க." என கூச்சலிட்டனர். அதோடு நிற்காமல் கையில் வைத்திருந்த கத்தியையும் வீசினர். அந்த கத்தி எம்.பி செல்வராஜ் மீது படாமல் அருகில் விழுந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசாரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் எம்.பியை தாக்க முயன்ற நபர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது எம்.பி மீது கத்தி வீசிய காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.