Skip to main content

தெலுங்கில் பேனர்; கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் பிரமுகர் கைது

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Naam Tamizhar party adiminister arrested for making death threats

 

திருவண்ணாமலை சிவன் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பல பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக திருவண்ணாமலை சின்னக்கடை தெரு பகுதியில் உள்ள திருவண்ணாமலை நாயுடுகள் சங்கத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தமிழ் உள்பட வேறு பல மொழிகளில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், திருமண மண்டபத்தின் முன்பு உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதி வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில்,  நேற்று முன் தினம் நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலையின் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் (44) சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அதன் பின்பு, அவர் அந்த திருமண மண்டபத்திற்கு சென்று அறிவிப்பு பேனரை பார்த்துள்ளார். அப்போது, அதில் தமிழ் மொழியோடு தெலுங்கு மொழியில் இருப்பதைப் பார்த்து கோபமடைந்துள்ளார். அந்த திருமண மண்டபத்தின் மேலாளர் வெங்கடேசனிடம் அண்டை மாநில மொழியில் பேனர் வைத்திருப்பது ஏன் என்று பாலசுப்பிரமணியன் கேட்டுள்ளார். மேலும், தெலுங்கு மொழியில் வைத்திருக்கும் பேனரை அகற்றாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

 

இது குறித்து அந்த திருமண மண்டபத்தின் நிர்வாகிகள் திருவண்ணாமலை டவுன் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உதவி கேட்டு வந்த பழங்குடியின பெண்ணுக்கு இந்த நிலையா? விழுப்புரத்தில் விஏஓ கைது

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

tribal woman who sought help; VAO arrested in Villupuram

 

விழுப்புரத்தில் பழங்குடியின இருளர் பெண்ணுக்கு தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக விஏஓ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

விழுப்புரம் மாவட்டம் நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் பெண் ஒருவரின் கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவருக்கான இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக நல்லாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜை அந்த பெண் அணுகியுள்ளார். அப்பெண்ணிற்கு விதவைகளுக்கான உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறிய விஏஓ ஆரோக்கிய பாஸ்கர் ராஜ், அப்பெண்ணின் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டு அடிக்கடி அவருக்கு போனில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் வேதனையடைந்த பழங்குடியின பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விஏஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

ஏற்றப்பட்டது 'மகாதீபம்'- பக்தியில் ஆர்ப்பரித்த திருவண்ணாமலை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Loaded 'Mahadeepam' - Tiruvannamalai chanted with devotion

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் தற்போது  ஏற்றப்பட்டுள்ளது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தீபத் திருவிழாவைக் காண்பதற்காக 35 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுதற்காக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள 044-28447703, 044-28447701, 8939686742 என்ற தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் காணாமல் போனால் அது குறித்து தகவல் தெரிவிக்க 9342116232 - 8438208003 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.