தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் இன்று (25.02.2021), அவை விதி 110 இன் கீழ் ஆசிரியர் - அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழக அரசு, புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கிடாத நிலையில், படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணி என்பது வெறுங்கனவாகவே இருந்து வருகிறது. தற்போது, தமிழக அரசுப் பணியிடங்களில், அவுட்சோர்சிங் மூலம் பணியமர்த்தப்படுவதாலும், தமிழ்நாட்டின் மத்திய மாநில அரசுகளின் பணியிடங்களில் வேறு மாநிலத்தவர்களே அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருவதாலும் தமிழகத்தின் படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
வேலைவாய்ப்புக்காக படித்த இளைஞர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆய்வுப்படிப்பு படித்தவர்கள் கூட தூய்மைப் பணிக்கும், அங்கன்வாடி, அலுவலக உதவியாளர் பணிகளுக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படித்த இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவு, எட்டாக்கனியாகிக்கொண்டே இருப்பதால் ஏராளமான இளைஞர்கள் தங்கள் உயிரைக் கூட மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், எவரும் எந்தவொரு கோரிக்கையையும் வைத்து வலியுறுத்திக் கேட்காத நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவை விதி 110 இன் கீழ் தமிழ்நாட்டின் ஆசிரியர் - அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. வேலை தேடும் இளைஞர்களை வேதனையடையச் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆசிரியர் - அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 எனும் அறிவிப்பானது, தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் மட்டுமே வழங்கிட முடியும். ஓய்வூதியக் காலப் பணப்பலன்கள் எதையும் வழங்கிட இயலாது எனும் நிலையிலேயே தமிழக அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறதோ? என்று தமிழ்நாட்டில் பரவலாக அச்சமும் ஐயமும் எழுந்துள்ளது.
தமிழகத்தின் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினைப் பறிக்கும், கனவினைச் சிதைக்கும் 60 வயதில் பணிநிறைவு எனும் அறிவிப்பை தமிழக முதல்வர் அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.