![mysterious object fell near Jollarpet and created a five-foot crater](http://image.nakkheeran.in/cdn/farfuture/gH7gX9CcK9NukVflXd6Hk7EZP806M2b4GClHrTDJj9A/1716790576/sites/default/files/inline-images/Untitled-21_25.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்மப் பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது.
இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திரும்பவும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது.
அப்பகுதி மக்களிடம் கூறுகையில் அந்த பள்ளத்தின் முன்பு அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று குவிந்தனர். மேலும் இந்த மர்மப் பொருள் என்னவென்று தெரியாமல் பீதி அடைந்தனர். அதன் உள்ளே கம்பு கொண்டு குத்தியபோது புதை குழிக்குள் போவதுப்போல் அந்த கம்பு போய் உள்ளது.
![mysterious object fell near Jollarpet and created a five-foot crater](http://image.nakkheeran.in/cdn/farfuture/r22Bzu436LR6rjWlqfPyaE-bUk5hdickqU3q4XHuYhU/1716790598/sites/default/files/inline-images/Untitled-20_21.jpg)
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளத்தில் இருந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். ஆய்வுக்கு பின்னரே விழுந்த மர்மப் பொருள் விண்கல்லா? அல்லது ஏதேனும் இடி விழுந்து இந்தப் பள்ளம் ஏற்பட்டதா? என தெரியவரும் என வருவாய் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இதே பகுதிகளில் இதுபோன்ற மர்ம பள்ளங்கள் உருவானது. பின்னர் அது விண்கல்லால் ஏற்பட்டது என கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.