Skip to main content

அறந்தாங்கியில் செவிலியர் மர்ம சாவு...  சிலமணி நேரத்தில் சிங்கப்பூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

mysterious incident in Aranthangi... A youth in Singapore within a few hours!

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் சில வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை செவிலியரை அவரது உறவினர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தூக்கிக் கொண்டு அறந்தாங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்து அவசர அவசரமாக மயானத்திற்கு தூக்கிச் சென்று தகனம் செய்துள்ளனர்.

 

இந்த சம்பவம் நடந்த சிலமணிநேரத்தில் சிங்கப்பூரில் வேலை செய்யும் அறந்தாங்கி புள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் கார்த்திக் தனது சமூக வலைத்தள கணக்குகளில்

 

'நாங்க ஒன்னு சேரப் போறோம். இனிமேல் எங்களை யாராலும் பிரிக்க முடியாது;
லவ் யூ ஆல், அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது.. பை'

 

இப்படி சில ஸ்டேட்டஸ்களை வைத்துள்ளார். கார்த்திக்கை அவரது நண்பர் தொடர்புகொள்ள தொடங்கினார்கள். எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள அவரது தாய் மாமாவுக்கு தான் இருக்கும் இடத்தின் லொக்கேசன் அனுப்பிவிட்டு பீச்சில் தூக்கில் தொங்கி விட்டார். லொக்கேசனை பார்த்து நண்பர்களுடன் சென்ற கார்த்திக்கின் தாய் மாமா சிங்கப்பூர் போலிசாருக்கு தகவல் கொடுத்து சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை முடிந்து பேக்கிங் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கார்த்திக்கின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

nn

 

இந்நிலையில் சிங்கப்பூர் போலீசார் மற்றும் தாய்மாமன் கொடுத்த தகவலின் அடிப்படையில் அறந்தாங்கி வட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஆமஞ்சி வட்ட கிராம நிர்வாக அலுவலர் மோகன் செவிலியர் இறந்ததாக கூறப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தபோது செவிலியரான இளம்பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மர்மமான முறையில் இறந்ததும், இறந்த பெண்ணின் உடலை காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் சொல்லாமல் தகனம் செய்துவிட்டதும் தெரிய வந்தது.

 

அதன் அடிப்படையில் இறந்தவர் உடலை யாருக்கும் தகவல் சொல்லாமல் தகனம் செய்த இளம்பெண்ணின் தாய், அண்ணன், அக்கா மற்றும் உறவினர்கள் மீது ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

விசாரணையில் இளம்பெண் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். அறந்தாங்கியில் செவிலியர் இறந்த சில மணி நேரத்தில் சிங்கப்பூரில் இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.