
நெல்லை மாவட்டத்தின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய களக்காடு, பாபநாசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் புலிகளின் காப்பகங்கள் உள்ளன. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகம் என்றும் புலிகளுக்கான சரணாலயம் உள்ளன. புலிகள் மற்றும் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் அதற்கு இடையூறு ஏற்படாத வகையிலிருக்கும்படியான காப்பகங்கள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் சுதந்திரமாக வாழ்வதற்காக மனிதர்களின் நடமாட்டம், போக்குவரத்துக்கள் மற்றும் அதிர்வலையை ஏற்படுத்தக் கூடிய செல்ஃபோன் டவர்கள் அமைப்பு போன்றவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மேலும் புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதும், அதன் இறைச்சியை விற்பனை செய்வதும் வனத்துறை சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
இந்த நிலையில், பாபநாசம் காப்புக்காடு மத்தளம்பாறை பீட்டிற்கு உட்பட்ட சாமி என்பவருக்கு சொந்தமான தனியார் தோட்டத்திலிருக்கும் மின்கம்பம் அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்திருக்கிறது. புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் செண்பகப் பிரியாவிற்கு இதுபற்றிய தகவல் போக, அவரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே சுமார் ஒன்றரை வயது மதிப்புள்ள ஆண் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை மேற்பார்வையாளர் அர்னால்ட், வினோத் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். அதுசமயம் சிறுத்தையின் வயிற்றில் முள்ளம்பன்றியின் இறைச்சி இருப்பது தெரியவந்தது. மேலும், அருகில் மயில் தோகைகள் சிதறிக் கிடந்ததுடன் அருகிலிருந்த மின் கம்பியில் சிறுத்தையின் முடி இருப்பதையும் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் சொல்வது என்னவெனில், "இறந்த சிறுத்தை அருகே மயில் தோகைகள் சிதறிக் கிடந்திருக்கின்றன. மின் கம்பியில் சிறுத்தையின் முடி வேறு இருக்கிறது. மின் கம்பத்திலிருந்த மயிலை சிறுத்தை பிடிக்க முற்பட்டபோது, மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம். மேலும், அதற்கு முன்னதாக அது முள்ளம்பன்றியை வேட்டையாடியிருக்கும். நான்கு நாட்களுக்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனாலும், பாதுகாக்கப்பட வேண்டிய புலிகள் காப்பகத்திலிருக்கும் சிறுத்தை இறந்தது பற்றிய விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.