Skip to main content

மாயமான சிறுவன் சடலமாக மீட்பு; இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம் 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Mysterious Boy Rescued and Young girl's confession

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிந்துமதி. இந்தத் தம்பதியருக்கு அனீஸ் (8) என்ற மகன் இருந்தார். அனீஸ் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் அருகே மாலை விளையாடிக் கொண்டிருந்த அனீஸ் வீடு திரும்பாத நிலையில், பதற்றமடைந்த சுரேஷ் மற்றும் சிந்துமதி தம்பதி அனீஸை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், சிறுவனைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காத காரணத்தினால் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதையடுத்து, காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியதில், சிறுவனை பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி ரேகா (30) தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதைப் பார்த்ததாகச் சிலர் தெரிவித்தனர். 

அதன் பேரில், அவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் அனீஸை கடத்திச் சென்று ஆந்திரா மாநிலம் வரதபாளையம் பகுதியில் கொலை செய்து பிளாஸ்டிக் பையில் மூட்டைக் கட்டி புதரில் வீசிச் சென்றதாக அதிர்ச்சி தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஆரம்பாளையம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து அந்தப் பகுதியில் தேடி வந்தனர். 

அப்போது, அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் சிறுவன் அனீஸ் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து, சடலமாகக் கிடந்த சிறுவனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக காளாஸ்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரேகாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.