தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்காக 2018 மே 8ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 9.09 ஏக்கரில், 50,422 சதுர அடி பரப்பளவில், சுமார் 79 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம், கடந்த 27.01.2021 அன்று திறக்கப்படட்டது.
இந்நிலையில், தீபாவளி தினமான கடந்த 04ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர், தான் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்தார். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளியான இன்று எங்க அம்மாவின் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை. என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன். என்னை எல்லாருக்கும் தெரியும்” என்றார். மேலும் அவரிடம் செய்தியாளர்கள், இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இன்று என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், “அது சில காரணங்கள் இருக்கு” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில் மறுநாளான 5ஆம் தேதி மாலை அவர் மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தீபாவளி என்பதால் நேற்று என் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். ஆனால், நேரம் கடந்துவிட்டதால் போலீஸ் அனுமதி மறுத்தனர். அதனால், இன்று 4 மணிக்கு வர அனுமதி அளித்தனர். அதனால், தற்போது வந்தோம். பல்லாவரத்தில்தான் கடந்த 30 வருடங்களாக இருக்கிறேன். இங்கு வரக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால், அம்மாவின் நினைவுகள் அதிகமாக வந்தது. அதுமட்டுமின்றி அதிகப்படியான மன அழுத்தத்தில் இருக்கிறேன், அதனால்தான் வந்தேன். எனக்குப் பிரச்சனை இருந்ததால்தான் இத்தனை வருடங்களாக வெளியே வரவில்லை. என்கிட்ட அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றது. ஒரு நல்ல நாளில் உங்களிடம் வெளிப்படுத்துகிறேன். தீபா என்னிடம் பேச முயற்சித்தார். ஆனால், நான் இன்றுவரை யாருடனும் பேசியதில்லை. என் அம்மாவை தவிர வேறு யாரும் சொந்தம் என இல்லை. எனக்கு இப்போதைக்கு சசிகலா மட்டும்தான் இருக்கிறார். அவரிடம் இதுவரை பேசியதில்லை. விரைவில் இன்னும் மூன்று, நான்கு நாட்களில் அவரைச் (சசிகலாவை) சந்தித்துவிட்டு உங்களிடம் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். அவரை சந்திக்க எனக்கு அனுமதி அளித்துள்ளார். என் வளர்ப்பு தாய், தந்தை மைசூரில் இருந்தனர். சமீபத்தில் அவர்கள் இறந்துவிட்டனர். நான் மைசூரிலும், சென்னையிலும் படித்தேன். கூடிய சீக்கரத்தில் அரசியல் பற்றியும் என்னைப் பற்றியும் அனைத்து விளக்கங்களும் உங்களுக்கு வந்துவிடும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் போயஸ் கார்டன் குறித்து கேட்டதற்கு, “ஒரு தாயைவிட சொத்து பெரிதல்ல. அவங்க திறமையில் அவங்க சம்பாதித்தை எனக்கு வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் நான் என் அம்மா இறந்துவிட்டார் என்று மெண்டல் அப்சட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் என் அம்மாதான் பெரிதாக தெரிந்தார்களே தவிர, அவர் சம்பாரித்த சொத்து, காசு, பதவி எதுவும் பெரிதாக தெரியவில்லை. அதிலிருந்து மீண்டு வருவதற்கே எனக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அம்மாவை ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். அவரை மருத்துவமனையில் அனுமதித்த அன்று, அவரை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. அதன்பிறகு உண்மை தெரிந்தபிறகு அவங்க வர சொல்லுங்க என்று சொன்னபோது, அப்போலோ மருத்துவமனையின் பின்பக்க வாசல் வழியாக என்னை அழைத்துச் சென்று என் அம்மாவை எனக்கு காண்பித்தார்கள். என் அம்மாவின் அஸிஸ்டண்ட் முத்துசாமிதான் என்னை அழைத்துச் சென்றார். என் கன்னத்தில் அம்மா முத்தம் கொடுத்தார்கள். அதன் பிறகு என் கைப்பிடித்ததும் அவர் கண் கலங்கிவிட்டது. நானும் அழ ஆரம்பிக்கும்போது, ‘பேபியைக் கூட்டிட்டு போய்டுங்க’ என்று சொன்னார்கள். என் பெயர் பிரேமா. என் அம்மா என்னை செல்லமாக ஜெயலட்சுமி என்று கூப்பிடுவார். கார்டன் வீட்டில் ஒருமுறை அம்மாவை நேரில் பார்த்து பேசியிருக்கிறேன். அடுத்தது, அப்போலோ மருத்துவமனையில் பேசியிருக்கிறேன்" என்றார்.