முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் ஜோலார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ''மனிதநேயம் உள்ள ஊடகங்களுக்கெல்லாம் நன்றி. இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ''நீண்ட நாளாக உங்களை புறக்கணித்ததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்ன பேசுவது என்ற தடுமாற்றம் தான் என்னை தடுத்தது.இன்று முழுமையாக பேரறிவாளனை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். 31 ஆண்டுகாலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறையில் கழிந்தது என உட்கார்ந்து யோசித்தால் அந்த வலி, வேதனை எவ்வளவு என்பது புரியும். அதை கடந்து வந்தாச்சு என் பையன். இந்த அரசு தொடர்ந்து பரோல் கொடுத்ததால் அவனின் உடல்நிலையை என்னால் கவனிக்க முடிந்தது. நான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். எனது மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி'' என்றார் ஆனந்த கண்ணீருடன்.