புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.
மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும். மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.
பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.
இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.