தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13, 2018) நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் விவசாயிகள் பல்வேறு வகையில் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயத்துறையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் நலன் காக்கும் வகையில் சங்கத்தின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி மாதம் சேலத்தில் நடக்க இருக்க இருக்கிறது.
தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுவதும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற குற்றங்களில் உரிய தண்டனை பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளையும் இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலுமே பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். துப்பாக்கி பயிற்சிகூட அளிக்கலாம்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுகவினரை விடுவிக்க காட்டும் முயற்சியை, ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க அரசு அக்கறை காட்டவில்லை.
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுக்க தவறி விட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் பலி எண்ணிக்கையை மட்டும் தெரிவித்து வருவது வருத்தம் அளிக்கிறது.
காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்திடும் எண்ணம் அரசுக்கு இல்லை. தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் நடத்த வேறு சில காரணங்களைச் சொல்லி வருகின்றனர். இடைத்தேர்தல் நடந்தால், ஒரு தொகுதியில்கூட அதிமுக வெற்றி பெறாது. மக்களவை தேர்தல் நேரத்தில், அதிமுக இங்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு எண்ணுகிறது. அதற்காகவே இடைத்தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர்.
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்தின் கருத்து, அவர் சிறந்த நடிகர் என்பதைக் காட்டுகிறது. நேற்று செய்தியாளர்கள் தெளிவாக இதுகுறித்து கேள்வி கேட்டபிறகும், அப்போது பதில் அளிக்காமல் கேள்வியை சரியாக கேட்கவில்லை என்று செய்தியாளர்கள் மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாம்கட்ட அரசியல் தலைவர்கள்தான் இதுபோல பேசுவார்கள்.
சர்கார் படத்தை முதல்வரும், அமைச்சர்களும் சேர்ந்து ஓட வைத்திருக்கிறார்கள். அந்தப் படத்தில் எதுவும் தவறாகச் சொல்லவில்லை.