மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு 'பேனா' அனுப்பும் போராட்டம் சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டம் குறித்து அச்சங்கத்தைச் சேர்ந்த மாரியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதிலிருந்து ஒருபகுதி, “மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க அரசு, இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் விதமாகவும், மாநில சுயாட்சி உரிமைகளைப் பறிக்கும் விதமாகவும், சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை குழிதோண்டி புதைக்கும் பல்வேறு நாசகரமான வேலைகளைச் செய்துவருகிறது.
அவற்றில் ஒன்றுதான், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்கக்கூடிய இந்த நீட் தேர்வு. இந்த நீட் தேர்வு, பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை அழித்தது மட்டுமில்லாமல், 18 மாணவர்களின் உயிரையும் பறித்திருக்கிறது.
நீட் தேர்வின் ஒரு நிவாரணியாய், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடுக்கான மசோதாவை, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அந்த வரைவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இது 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் 4 வாரக்காலம் அவகாசம் தேவை என்று தமிழக ஆளுநர் கேட்பது நியாயமற்றது. தமிழக ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும். அல்லது தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்தார்.