![tn assembly election wins dmk aliance music director rahman tweets](http://image.nakkheeran.in/cdn/farfuture/36eNNCG2ipiNIZFuCI1mw3RfFzslLajnKqRLnTkjm-4/1620014250/sites/default/files/inline-images/ar3222.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, திமுக தனிப்பெருமைப்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
![tn assembly election wins dmk aliance music director rahman tweets](http://image.nakkheeran.in/cdn/farfuture/7RCkjkVFzF5M_zgM-1AX9C9B76cMnASIisi0HpiGmMg/1620014259/sites/default/files/inline-images/arrahman333.jpg)
அந்த வகையில், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். பொறுப்பை உணர்ந்து அரசின் கடமைகளை முறையாக மு.க.ஸ்டாலின் ஆற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.