புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், கீரனூர், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துவந்தன. இதேபோல் அந்த பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களும் அரங்கேறி வந்தன. இந்த கொள்ளை குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸ் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க கீரனூர் டி.எஸ்.பி பிரான்சிஸ் மேற்பார்வையில், மாத்தூர் காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீசார் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் குறித்து அதிரடி விசாரணை நடத்தினார்கள். .
இந்நிலையில் மூளி பட்டியை சேர்ந்த ரவி என்பவரிடம் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக மாத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக டூவீலரில் இருவர் வேகமாக சென்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று மண்டையூர் அருகே மடக்கி பிடித்தனர். பிடிப்பட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் திருச்சி மாவட்டம் திருவானைக் கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தரபாண்டியன் (36), என்பதும், மற்றொருவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ரவுடி செல்வகுமார் (35) என்பதும் தெரிய வந்தது. இவர் திருச்சியில் பிரபல ரவுடிகளான முட்டைரவி, சாமிரவி, குணா ஆகியோர் குழுக்களில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்டார்களென அதிர்ச்சியுடன் விசாரிக்க ஆரம்பித்தனர்.
சுந்தரபாண்டியன், செல்வகுமார் மற்றும் இவர்களது கூட்டாளி வினோத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பல முறை சிறைக்கு சென்று வந்தது வெளிச்சத்திற்கு வந்தன.
இதில் சுந்தரபாண்டியன் மீது 7 கொலை வழக்குகள், 3 கொள்ளை வழக்குகள், மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் செல்வகுமார், வினோத் ஆகியோர் மீதும் திருச்சி எடமலைபட்டி புதூர், கே.கே.நகர், உறையூர், தஞ்சை பூதலூர், புதுக்கோட்டை , தோகைமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிடிப்பட்ட இரண்டு ரவுடிகள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக பதுங்கி இருந்த கூட்டாளி வினோத்தையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அரசு பள்ளி ஆசிரியையிடம் வழிப்பறி செய்து 5 பவுன் தாலி செயினை பறித்தது, கீரனூர் பகுதிகளில் 3 இடங்களில் பூட்டிய வீட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூபாய் 20 ஆயிரம் கொள்ளை அடித்தது மற்றும் பல்வேறு பகுதிகளில் கார், டூவீலர் திருடியதை ஒப்பு கொண்டனர். இதனடிப்படையில் அவர்களிடம் இருந்து 32 பவுன் நகை, 2 கார்கள், 3 டூவீலர்கள், ரொக்கம் ரூபாய் 44 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுக் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து புதுக்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் மூன்று பேருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சிதம்பரம் நகரில் கடந்த 7 மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து குற்றச் சம்பவங்களுக்கு உதவியாக, நிழல் தாதாவாக இருந்தவர் பாலச்சந்தர் என்பவர் என்பது போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தன் மீது உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்ள அரசியல் பிரமுகராக வலம் வந்துள்ளார் பாலச்சந்தர். இந்நிலையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு ரவுடிகளின் குற்ற சம்பவகளுக்கு அடிப்படை காரணகர்த்தாவாக பாலச்சந்தர் இருந்துள்ளதாக போலீசார் தங்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க காரில் செல்வதும், பொருட்களை கொள்ளையடிப்பதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டூவீலர்களையும் திருடி வந்துவிடுவார்களாம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், மாத்தூர், ஆவூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பிரபல ரவுடிகள் கொள்ளையர்கள் உருவில் உலாவிய 3 பேர் கைதான சம்பவம் கீரனூர் போலீஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இதுக்குறித்து பாலச்சந்தர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய சென்றபோது, அவர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்.