நெல்லை மாவட்டத்தின் நாங்குனேரி வட்டம் முனைஞ்சிபட்டி அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் மகன் ஜெகதீஷ் துரை (32) விஜயநாராணயம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றி வந்தவர்.

2018ம் ஆண்டு மே 06ம் தேதி பரப்பாடி அருகில் உள்ள நம்பியாறு பகுதியில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. அந்த இரவில் மணல் கடத்தல் டிராக்டரை தனது பைக்கில் விரட்டிச் சென்ற ஜெகதீஷ்துரை அதை தடுத்தபோது மணல் கடத்தல் கும்பல் டிராக்டரின் இரும்பு லீவரால் அவரை அடித்தே கொன்றது.

கணவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க தேடிய போலீசாரிடம், தாமரைக்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஜெகதீஷினின் உடல் கிடைத்தது. மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற ஏட்டு கொலையில், தாமரைக்குளத்தைச் சேர்ந்த முருகன், கிருஷ்ணன், முருக பெருமாள், மணிக்குமார், ராஜாரவி அமிதாப்பச்சன், ஆகிய 6 பேர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. 40 பக்க குற்றப்பத்திரிகை 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். நீதிபதி கிளாட்சன் பிளசட்தாகூர் வழக்கை விசாரித்தார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாமரைக்குளத்தின் முருகன், கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பசன், மூவருக்கு ஆயுள் தாண்டனை ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் வழக்கில் முருகப் பெருமாள் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கின் தீர்ப்பைக் கேட்பதற்காக நெல்லை மாவட்ட எஸ்.பி.யான அருண் சக்திகுமார் நீதிமன்றம் வந்திருந்தார்.