தாய் வைத்திருந்த தூக்க மாத்திரையை நான்கு வயது குழந்தை தெரியாமல் உட்கொண்டதில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த தாம்பரம் சேலையூர் சந்தோஷபுரத்தில் வசித்து வருபவர் அஸ்வினி. அவருடைய மூத்த மகன் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தல் படி தூக்கமின்மை காரணத்திற்காக தூக்க மாத்திரை பயன்படுத்தி வந்துள்ளார்.
கணவர் குஜராத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று இரவு தூக்க மாத்திரையை போட்டுக் கொள்வதற்காக படுக்கையறையில் ரெடியாக மாத்திரையை எடுத்து வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவருடைய நான்கு வயது மகள் மாத்திரைகளை எடுத்து உட் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தெரியாமல் கழிவறையிலிருந்து வந்த அஸ்வினி குழந்தையுடன் உறங்கச் சென்று விட்டார். ஆனால் அதிகாலையில் எழந்து பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரைதள்ளி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அஸ்வினி குஜராத்தில் பணியாற்றி வரும் தன்னுடைய கணவருக்கு தகவலை செல்போனில் சொல்லிவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அஸ்வினியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தூக்க மாத்திரையை குழந்தை தெரியாமல் உட்கொண்டதால் இறந்ததாகக் கூறப்பட்டாலும், நுரை தள்ளுவதை பார்த்த தாய் ஏன் குழந்தையை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடவில்லை என்ற சந்தேகம் இருப்பதால் இது கொலையா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.