
தஞ்சையில் பிறந்த குழந்தையைக் கழிவறை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெர்ஸ்டன் கழிவறையில் நீர் தேக்க வைத்திருந்த தொட்டியில் பிறந்து சிலமணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை தொப்புள் கொடியுடன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையின் சிசிடிவி காட்சி, மருத்துவமனை வருகைப் பதிவு ஆகியவற்றைக் கைப்பற்றி விசாரித்த போலீசார் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கைது செய்தனர்.

பூதலூர் அடுத்த ஆலக்குடி பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பிரியதர்ஷினி திருப்பூரில் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது அங்கு ஒரு நபருடன் காதல் ஏற்பட, தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கிய அந்த நபர் தான் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்பதை அறிந்தவுடன் விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறிய பிரியதர்ஷினி, இதனால் மருத்துவமனை கழிவறையிலேயே குழந்தையைப் பெற்று நீரில் அழுத்தி கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் தஞ்சை மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.