Skip to main content

“மொதல்ல நாங்க நம்பல... சாகுற வரைக்கும் மறக்க மாட்டோம்யா”- கண்ணீர் கசிய முதல்வருக்கு நன்றி கூறிய தாய்!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

the mother who thanked the chief minister with tears

 

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரில் அன்றாடம் கூலி வேலை பார்த்தால் தான் அடுப்பெரியும் என்ற வறுமைக் கோட்டிற்கும் மிகக் கீழாக உழன்று கொண்டிருப்பவர்கள் சீதாராஜ், பிரேமா தம்பதியர். இவர்களுக்கு தனலட்சுமி, இசக்கியம்மாள் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இசக்கியம்மாள் நான்கரை வயதுச் சிறுமி, இரண்டு பெண் பிள்ளைகளையும் கரோனா நேரத்தில் வீட்டில் விட்டு விட்டு கணவனும் மனைவியும் கொத்தனார் வேலைக்குப் போனால் மாலையில் தான் வீடு திரும்புவது வழக்கம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல் கொத்தனார் வேலைக்குத் தம்பதியர் போக, பழக்கப்படி வீட்டிலிருந்த சிறுமி இசக்கியம்மாள் பக்கத்து வீட்டில் விளையாடியிருக்கிறாள். அதுசமயம் அந்த வீட்டின் பிரிட்ஜ் மீதிருந்த வாஷிங் பவுடரைத் தின்பண்டம் என்று நினைத்து அறியாத சிறுமி இசக்கியம்மாள் தின்றிருக்கிறார்.

 

காலை 11 மணிக்கு சாப்பிட்ட சிறுமி இசக்கியம்மாள் சிறிது நேரத்திற்குள் அடி வயிற்றைப் பிடித்தபடி அலறிக் கொண்டு ரத்தவாந்தி எடுத்திருக்கிறாள். பதறிய அந்த வீட்டுக்காரர்கள் அவள் தின்றதை அவள் மூலமே அறிந்து அதிர்ந்து போய் தாமதமில்லாமல் சிறுமியின் தாய், தந்தைக்கு தகவல் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். பதறியடித்துக் கொண்டு வந்த சிறுமியின் பெற்றோர் ரத்த வாந்தியோடு கதறிக் கொண்டிருந்த மகள் இசக்கியம்மாளை செங்கோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்பு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கே ஒருவார சிகிச்சைக்குப் பின்பு தேறாத சிறுமியை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். வீடு வந்த சிறுமிக்கு வயிறு வலி பொறுக்க முடியவில்லை. முறையான உணவும் உண்ண முடியாமல் வாடிக் கதறியிருக்கிறாள்.

 

the mother who thanked the chief minister with tears

 

அதையடுத்து சிறுமியைப் பெற்றோர் பாளை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். போராடிய டாக்டர்கள் டியூப் போட்டு சிறுமி சாப்பிட்டதில் பசை போன்ற கட்டியை வெளியே எடுத்து சிகிச்சையை 15 நாட்கள் தொடர்ந்து மேற்கொண்டதில் எந்தவித முன்னேற்றமுமில்லையாம். இந்நிலையில் 20 நாட்களாக சிறுமியால் வழக்கமான உணவைச் சாப்பிட முடியாமல் போனதால் எலும்பும் தோலுமாக அதிருமளவுக்கு உடல் வற்றி மெலிந்து உயிருக்காகப் போராடியிருக்கிறார். ஒற்றை வரியில் சொல்லப் போனால் அவளிடம் உயிர் மட்டுமே மிஞ்சியிருந்தது. தன் மகள் பிழைப்பாளா மாட்டாளா எனக் கதி கலங்கிய பெற்றோர் சீதாராஜ், பிரேமாவுக்கு கையறு நிலை தனியார் மருத்துவம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சூழல்கள். அரசு மருத்துவமனைகளோ கிட்டத்தட்ட சிறுமியைக் கைகழுவி விட்ட நிலை தான்.

 

ரெண்டும் கெட்டான் நிலையிலிருந்த பெற்றோரால் கண்ணீர் விட்டுக் கதறத்தான் முடிந்ததேயொழிய, மகளின் மீட்சிக்கு வழி தெரியாமல் தவித்தார்கள். இந்தச் சூழலில் தகவல் கிடைத்த நாம், சிறுமிக்கு நேர்ந்ததை அது சமயம் நக்கீரன் இதழ் மற்றும் நக்கீரன் இணையதளம் மூலம் வெளிப்படுத்தியிருந்தோம். அது அரசு மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் மத்தியில் மின்னலாய் வைரலானது. அரசிடமிருந்து உடனே தகவல் பறந்திருக்கிறது. நெல்லை கலெக்டர் விஷ்ணு மூலமாக சிறுமி இசக்கியம்மாள் மீண்டும் பாளை அரசு மருத்துவமனைக்கு வரவரழைக்கப்பட்டு பின் அங்கிருந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அவசர ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட சிறுமி இசக்கியம்மாளை எழும்பூரிலுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

the mother who thanked the chief minister with tears

 

அதன் பிறகே பெற்றோர்களுக்கு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது. ஒன்றரை மாதமாக அங்கு நடந்த மருத்துவர்களின் சிகிச்சையின் மூலம் மறு ஜென்மமெடுத்து திரும்பியிருக்கிறார் சிறுமி இசக்கியம்மாள். அந்த குழந்தையைப் பார்ப்பதற்காக செங்கோட்டையிலிருக்கும் பெற்றோர்களின் வீட்டிற்கு நாம் சென்ற போது, சிறுமி தேறிய பழைய உருவத்தில் முட்டை ஆம்லெட்டை வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது கண்டு நமக்குள்ளே ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. 10 X 8 அடி சைசிலிருந்த ஒரே ஒரு அறை மட்டுமே அவர்களின் குடியிருப்பு அதுவும் வாடகையில். அதில் பாதி இடத்தைத் தட்டு முட்டுச் சாமான்கள் அடைத்திருந்தன அதன் மூலம் அவர்களின் வறுமையின் நிறம் தெரிந்தது. குழந்தை சாப்பிடுவதைக் கண்ட தந்தை சீதாராஜ், தாய் பிரேமா இருவரிடமும் நிம்மதி, ஆறுதலுடனிருந்தனர். முதல்வரின் கருணைப் பார்வையால் தங்கள் மகள் உயிர் கொடுக்கப்பட்டு மறு ஜென்மமெடுத்ததை ஆனந்தக் கண்ணீரும் பரபரப்புமாய் சீதாராஜூம், பிரேமாவும் நம்மிடம் விவரித்தார்கள்.

 

‘பத்திரிகைகள் மூலமா முதல்வரய்யாவுக்குத் தகவல் தெரிஞ்சி அதிகாரிக மூலமா எங்கள குழந்தையோட சென்னைக்கு கூட்டிப் போனாக. அங்க எக்மோர்ல சிறப்பு பேபி வார்டில சேத்து இசக்கியம்மாளுக்கு டாக்டர்கள் சிகிச்சை செஞ்சாக முதல் ரெண்டு வாரம் எங்கள உள்ள அனுமதிக்கல்ல டாக்டர்களோட சிறப்பு சிகிச்சையிலிருந்ததால. லேசுல சொல்ல முடியாது. பெரிய பெரிய டாக்டர்கள்லாம் அப்பப்ப வந்து தேவையான சிகிச்சையப் பண்ணுனாக. முதல்ல சிகிச்சை பண்ணிக்கிட்டே குளுகோஸ் போட்டுட்டிருந்தாக. வயித்துல ஆப்ரேசன் பண்ணதோட, பக்கத்துல வயித்துக்குள்ள ஒரு ஓட்டயப் போட்ட கொஞ்ச நாளுக்குப் பொறவு அது வழியா உணவுக் குடுத்தாக. ஏம்னா ஆரம்பமா வயித்துல சிகிச்சை பண்ணப்ப புள்ளைக்கு தெம்பானதும் அந்த சைடு டியூப் வழியா பச்சை முட்டை, வெள்ளைக்ககரு, ஆரஞ்சு பழம், ஹார்லிக்ஸ்னு எல்லாத்தையும் தனியா சூஸ் பண்ணி ஆரம்பத்தில குடுத்தாக. 10 டாக்டர்களுக்கு மேலருக்கும் அவுக கவனிப்புலதானிருந்தா.

 

the mother who thanked the chief minister with tears

 

அமைச்சர் மா.சுப்பிரமணியம் அடிக்கடி வந்து கவனிச்சாக எங்களுக்கு ஆறுதல் சொன்னாக அவுக கூட எழும்பூர் எம்.எல்.ஏ.பரந்தாமனும் வந்திருந்தாக. நாங்க தங்குறதுக்கு சிரமப்படுறது தெரிஞ்ச அமைச்சர் மா.சுப்பிரமணியம். வெளிய தங்க வேண்டாம்னு எங்களுக்கு எம்.எல்.ஏ. குவார்ட்டர்சுல ரூம் போட்டு சமைக்கிறதுக்கு உணவுப் பொருள்களலாம் குடுத்து எங்களுக்குச் செலவு இல்லாம அவுக ஏற்பாட்ல கவனிச்சது பெரிய விஷயம்யா. அப்படி அமைச்சர் மா.சுப்பிரமணியம் வர்றப்ப, புள்ளைக்கு நடக்குற சிகிச்சைய டாக்டர்ககிட்டப் பேசிட்டு வந்து எங்கள்ட்ட, அம்மா ஒங்க புள்ள ஆரம்பத்தில எப்புடி ஆரோக்கியமா இருந்தாளோ அதே மாதிரி ஒங்ககிட்ட அவள ஒப்படைப்போம்மான்னு அவுக சொன்னத மொதல்ல நாங்க நம்பலய்யா. அப்பறமா தொடர்ச்சியா சிகிச்சைக்குப் பொறவு அவ தேற ஆரம்பிச்சி, சூஸ் சாப்பாட்டோ, அவளே இட்லி, இடியாப்பம், முட்டைன்னு கையால எடுத்துச் சாப்புட்டதப் பாத்தப் பொறவு தாம்யா எங்களுக்கு நம்பிக்கை வந்திச்சி.

 

சிகிச்சை முடிஞ்சி அவ நல்லபடியா தேற ஆரம்பிச்சதும் டாக்டர்க, அவளோட வழக்கமான சாப்பாட்டோட இட்லி, இடியாப்பம், அவிச்ச முட்டைன்னு சத்தான ஆகாரம் குடுக்கச் சொன்னாக. குடுத்தோம். பழையபடி சாப்புட ஆரம்பிச்சா. அவுக சொன்ன மாதிரி முதல்ல குழந்தை எப்படியிருந்தாளோ அதப் போலவே சிகிச்சைக்கப்புறம் அவ தேறுனதப் பாத்ததும் தான் எங்களுக்கு தெம்பு தைரியமும் வந்திச்சி. ஆரம்பத்தில 15 கிலோ எடையிருந்தவ, பவுடரத் தின்னு எலும்பும் தோலுமா மூனரை கிலோ எடையாயிட்டா. இப்ப சென்னைல டாக்டர்ய்யாவுக சிகிச்சைக்கப்பால தேறுனவ வழக்கப்படி 14 கிலோ எடைக்கு வந்திட்டா. அம்மா நாங்க சொன்ன மாதிரி, ஒங்க புள்ளைய பழைய நிலைமைக்குக் கொண்டு வந்து ஒங்க கிட்ட ஒப்படைச்சிட்டோம். கவனிச்சுக்கங்கன்னு டாக்டரய்யா எல்லாரும் சொல்லி, எங்க கிட்ட ஒப்படைச்சதக் கண்டு நாங்க அழுதிட்டோம். பதில் சொல்ல வார்த்தை வரல.

 

the mother who thanked the chief minister with tears

 

டாக்டர்க கால்லவிழுந்து கும்பிட்டு எங்க நன்றியச் சொன்னோம்யா. முதல்வர ஸ்டாலின் அய்யா தலையீட்டால எங்க புள்ளைக்கியிப்புடி ஒரு ராச வைத்தியம் கெடைக்கும்னு நாங்க சொப்பனத்திலயும் நெனைச்சுப் பாக்கலய்யா. அவுகளப் பாத்து நன்றி சொல்லணும்னு சொன்னப்ப, அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவுக ஏற்பாடு பண்ணுனாக. முதல்வரய்யாவப்பாத்து நன்றி சொன்னோம். அப்ப முதல்வரய்யா புள்ளயக் கூப்பிட்டு, ஒம் பேரு என்னம்மான்னு கேட்டாக. சொன்னா. என்ன சாப்பிட்டன்னு அய்யா கேட்டதுக்கு இட்லி சாப்பிட்டேம்னா. அவுளுக்கு ஆறுதல் சொன்னவுக, நாங்களே கொஞ்சம் கூட எதிர்பாக்கல்ல. 5 லட்சம் ரூவா செக் குடுத்து புள்ளையோட வைத்தியத்திற்கு வைச்சுக்கங்கன்னாக. ஒலகத்தில யாரு இப்புடி செய்வாகய்யா. எங்க புள்ளைக்கி உசுரக்குடுத்து மறு ஜென்மம் எடுக்க வைச்ச முதல்வர் ஸ்டாலின் அய்யாவ நாங்க சாகுற வரைக்கும் மறக் மாட்டோம்யா’என கண்ணீருடன் உருகினார்கள்.

 

‘எங்க உறவுக்காரங்களே உதவல்ல. அன்னிதம், பக்கத்து வீட்டு ரமேஷ் அண்ணனும் அந்த அக்காவும் எங்களுக்கு ஆரம்பத்திலருந்து கடைசி வரைக்கும் உதவுனவுக. மறக்க மாட்டோம்ய’ என்றார்கள் கண்களில் கண்ணீர் கசிய. இது மக்களின் அரசு. அரசும், அரசு இயந்திரங்களும் மக்களுக்கானதே என்பதே நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிரதமர் சொல்வது அதிசயமான ஒன்றாக உள்ளது' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
 'What the Prime Minister is saying is something amazing' - Minister Ma.su interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது  முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.