திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலமடை ஊராட்சியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சி, ஆறுமுகக்கனி தம்பதியின் மகள் அருணா. 19 வயதான அருணா கோவையில் நர்சிங் படித்து வந்தார். தந்தை சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
கல்லூரி விடுப்பில் அருணா வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரது அருகிலேயே அவரது தாய் வாயில் நுரை தள்ளியபடி கீழே கிடந்துள்ளார். நள்ளிரவில் தாய் மற்றும் மகள் இருவரும் இவ்வாறு கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தாய் மற்றும் மகளை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் அருணா மற்றும் அவரது தாயைப் பரிசோதித்ததில், அருணா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவரது தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த சீவலப்பேரி காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அருணா இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்ய அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அருணாவின் பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தபோதும் மகள் தன் முடிவில் மாற்றம் கொள்ளததால், தாயே அவரது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
அருணாவைக் கொலை செய்த பின் தாயும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் காவல்துறையினர் மாணவியின் தாயிடம் விசாரணை செய்து வருகின்றனர்.