சிவகங்கை மாவட்டம் திருமன்பட்டி ஊரைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ரஞ்சிதா(23). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்திரன் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார்.
குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன் தினம்(10.12.2024) சந்திரன் ரஞ்சிதா இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அன்றைய தினமே இருவரும் சண்டை போட்டுவிட்டு சந்திரன் மட்டும் கோவித்துக்கொண்டு வெளியூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சிதா அவரது ஊருக்கு அருகே உள்ள திருமலை கிராமத்தில் சுற்றித் திரிந்துள்ளார். இது குறித்த தகவல் சந்திரனின் காதுக்கு சென்றதையடுத்து, மனைவி ரஞ்சிதாவை தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவர் நேற்று முன்தினம் இரவு கீழப்பூங்கொடி அய்யனார் கோவில் அருகில் உள்ள கிணற்றில் தனது இரு பெண் குழந்தைகளையும் வீசி கொலை செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிணற்றில் இருந்து இரு பெண் குழந்தைகள் சடலத்தையும் மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரஞ்சிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.