Skip to main content

மருத்துவர் இல்லாததால் தாயும் சேயும் உயிரிழப்பு

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

 Mother and  Say perished in the absence of a doctor

 

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராம்குமார் என்பவர் மனைவி அரங்கநாயகி (வயது 18).  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மறுநாள் காலை 6 மணிக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. மேலும் அரங்கநாயகின் உடல்நலமும் பாதிக்கப்பட்டதால் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே  உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு  திரண்ட அவரது உறவினர்கள், வ. புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததால்தான் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.