/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72642.jpg)
மனநல காப்பகம் என்ற பெயரில் அனுமதி பெறாமல் நடந்து வந்தஇடத்தில் நிகழ்ந்த தொடர் உயிரிழப்புகளும், சிறுவனின் பாலியல் புகாரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது குந்தலாடி. இந்த கிராமத்தில் 'லவ் ஷேர்' அன்பை பகிர்வோம் என்ற பெயரில் மனநல காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த அந்த இடத்தை காப்பகம் என சொல்வதை விட அடைத்து வைக்கும் இடம் என்ற பெயரே பொருத்தமானதாக இருக்கும். அந்த அளவிற்கு காப்பகத்தில்நிகழ்ந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மொத்தம் 23 பேர் அந்த காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் பலர் இறந்ததாகவும் வெறும் 13 பேர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுவன், இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேர் என அந்த காப்பகத்தில் இருந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழு காப்பகத்திற்கு சென்று அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது காப்பகத்தின் அறையில் ஒரே ஒரு இரும்பு கட்டில் அதன் பக்கத்திலேயே திறந்த வெளியில் கழிப்பறை இருந்தது. சுகாதார வசதிகள், சரியான உணவு என எதுவும் இன்றி அங்கு இருந்தவர்கள் அடைத்து வைத்து கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72643.jpg)
அகஸ்டின் என்பவர் இந்த காப்பகத்தை நடத்தி வரும் நிலையில் ஆதரவற்றவர்கள், முதியவர்களை அடைத்து வைத்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தது. சோதனை செய்ய அதிகாரிகள் உள்ளே சென்ற பொழுது 16 வயதில் சிறுவன் ஒருவன் இருந்துள்ளான். சிறுவனிடம் அதிகாரிகள் கேட்ட பொழுது காப்பக உரிமையாளர் அகஸ்டின் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார் என சிறுவன் அழுது புலம்பி இருக்கிறான். காப்பகத்திற்கு அருகிலேயே வனப்பகுதி உள்ள நிலையில், காப்பகத்தில் உயிரிழந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் அந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது தொடர்பாகவும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழுமையான ஆய்வில் காப்பகத்தில் எந்தவித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. கேரளாவிலும் ஒரு காப்பகம் ஒன்றை அகஸ்டின் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் அங்கும் விசாரணை தீவிரப்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர். உடனடியாக அங்கிருந்த அனைவரும் மீட்கப்பட்டு கோவையின் உள்ள காப்பகம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. அரசினுடைய முறையான அனுமதி பெறாமல் இத்தனை ஆண்டுகள் இப்படி ஒரு காப்பகம் செயல்பட்டு வந்தது எப்படி? இதற்கு உதவியவர்கள் யார்? இங்கே அனுமதிக்கப்பட்டது உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தனர்? அவர்களுடைய விவரங்கள் என்ன? காப்பகத்தில் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றதா? என பல்வேறு கேள்விகள் எழ, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)