ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசியதாக 'பப்ஜி' மதன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சுமார் 8 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட 'பப்ஜி' மதனின் இரண்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. யூடியூப் சேனலின் அட்மினிடம் பாஸ்வேர்டு பெற்று இரண்டு யூடியூப் சேனல்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் முடக்கினர்.
இந்நிலையில், பப்ஜி மதனால் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது மதனிடம் ஏமாந்த 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். ஆபாச பேச்சு பற்றி கண்டித்தும் பலமுறை திட்டியதாக பப்ஜி மதன் மீது புகார்கள் வந்துள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதரவற்றோருக்கு உதவி செய்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. மதனால் ஏமாந்தவர்கள் [email protected] என்ற மெயிலுக்குப் புகார் அளிக்கலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.