நன்னிலம் தொகுதியில் ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்துவிட்டு நாங்கதான் மீண்டும் வெற்றி என கெத்து காட்டுகிறார்கள் அமைச்சர் காமராஜ் விசுவாசிகள்.
2021 சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்க இருக்கிறது. அனல்பறக்கும் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருக்கிறது. இதற்கிடையில் திண்ணைப் பிரச்சாரங்களும் களைக்கட்ட துவங்கிவிட்டன. அந்தவகையில், வாக்காளர்களுக்கான செட்டில்மென்டும் துவங்கிவிட்டது.
அந்த வகையில் நன்னிலம் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் காமராஜுக்கு இந்தமுறை ரொம்பவே டஃப் கொடுக்கும் வகையில், திமுக வேட்பாளர் ஜோதிராமன் அதிரடி காட்டிவருகிறார். முந்தைய தேர்தல்களில் இல்லாதவகையில் அமைச்சர் காமராஜின் குடும்பமே திண்ணைப் பிரச்சாரத்தில் இருக்கிறது. அதோடு அவரது ஆதரவாளர்களும், உறவினர்களும் சுமார் ஆயிரம் பேர் பூத் வாரியாக நின்று அதிமுகவினரை கன்காணித்துவருகின்றனர். அவர்களின் கிடுக்கிப்பிடி கண்கானிப்பு அதிமுகவினரையே கடுப்பேற்றிவருகிறது.
இந்தநிலையில் கருத்துக்கணிப்புகள் முழுவதும் எதிர்மறையாக வருவதை உணர்ந்த அமைச்சர் காமராஜ், முதற்கட்டமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. "தேர்தலுக்கு முதல்நாள் இரவு இரண்டாவது கட்டப் பண விநியோகம் செய்யும் திட்டத்திலும் இறங்கியுள்ளார். இதுவரை, 17 கோடிவரை செலவு செய்துவிட்டார். இன்னும், 13 கோடி வரை செலவு செய்யும் திட்டத்தோடு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
''பணம் பாதாளம்வரை பாயும்'' என்பதை இந்தத் தொகுதியில் நிச்சயம் நிரூபிப்போம் எனச் சவால்விடுகிறார் அதிமுக நிர்வாகி ஒருவர்.