/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk-stalin-agri_0.jpg)
திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இன்று முதல் ஜூலை 29 வரை மூன்று நாட்கள் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ‘வேளாண் சங்கமம் - 2023’ வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “ திமுக அரசு பொறுப்பேற்றுச் செயல்படுத்திய திட்டங்களினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 - 22 ஆம் ஆண்டு 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு சாதனையைப் படைத்திருக்கிறோம். குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காகக் கடந்த 2022 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை எட்டியிருக்கிறோம். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக அரசு, நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசனப் பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது. அந்தச் சாதனைப் பயணத்தின் தொடர்ச்சியாகத்தான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உழவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்களுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 விழுக்காடு கூடுதல் மானியத்தை அரசு வழங்கி வருகிறது. இதற்கென 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதலாக சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும், இதர இரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையாக மட்டுமே 376 கோடியே 63 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான டன் ஒன்றுக்கு 2821 ரூபாய்க்கு மேல் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. உழவர்களிடையே காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம். பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்த ஏதுவாக நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agri-expo-final.jpg)
இயந்திரங்கள், தொழிற்சாலைகள், துணி நூல்கள் ஆகியவற்றுக்காகக் கண்காட்சிகள் நடத்துவதைப் போல வேளாண்மைக்குக் கண்காட்சி நடத்துவதும் மிக மிக அவசியமானது. வேளாண்மைத் துறையானது அதிகமான அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகவும் இதுபோன்ற கண்காட்சிகள் மூலமாக நாம் சொல்லலாம். நவீனத்தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண்மை இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் தொழில் நுட்பங்கள் என ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றிய அடிப்படைத்தகவல்களை உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்தாக வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன. உழவர்களது உற்பத்தி அதிகமாக வேண்டுமானால் அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் வேளாண்மையில் நவீனத்தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்.
நேற்று நான் திருச்சிக்கு வந்தபோது, செய்தித்தாளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதில் இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்துத்தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கைவைத்திருந்தனர். இது பற்றி வேளாண்மைத் துறையினுடைய அதிகாரிகளையும், அமைச்சரையும் அழைத்துப் பேசினேன். நான் அவர்களோடு கலந்து பேசி அதை உடனடியாக இந்தக் கோரிக்கையைஅரசு ஏற்றுக்கொண்டு 75 கோடிரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தைப் பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவின் மூலமாக உழவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத்தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)