
திறப்பு விழா சலுகையாக ரூ.99க்கு மொபைல் போன்களை வழங்குவதாக தனியார் மொபைல் போன் நிறுவனம் அறிவிக்க, அதிகாலை இரண்டு மணியிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று மொபைலையும், மரக்கன்றுகளையும் பெற்று செல்கின்றனர் சிவகங்கை மாவட்ட மக்கள்.

குடும்பத்திற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் வீட்டினில் இருக்கின்றதோ.? இல்லையோ..? மொபைல் போன் மட்டும் அந்த வீட்டினில் கட்டாயம் இருக்கும். அந்தளவிற்கு மக்களோடு மக்களாக அவர்களது வாழ்வில் இன்றியமையாதப் பொருளாக இருக்கின்றது மொபைல் போன்கள். அந்த மக்களை தங்களோடு இணைந்திருக்க, தக்கவைக்க மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் செய்யும் தள்ளுபடிகள் எண்ணிலடங்காதவை. இதில் ஜியோ, ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் முன்னனியில் இருக்கின்றன. இதற்கு முன்னோடியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.501க்கு மொபைல் போனை கொடுத்து மொபைல் புரட்சி செய்த காலமும் உண்டு.

அதுபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோட்டை சேர்ந்த மொபைல் போன்கள் விற்கும் தனியார் நிறுவனம் ஒன்று, தனது கடை திறப்பு விழா சலுகையாக ரூ.99க்கு மொபைல் போன் என அறிவிக்க, மாவட்டத்திலுள்ள குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்புத்தூர், புதுவயல் மற்றும் சிங்கம்புணரி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த மக்கள் அதிகாலை இரண்டு மணிக்கே வந்து, நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மொபைல் போனையும், மரக்கன்றுகளையும் வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.