Skip to main content

எப்போது கைது செய்ய வருகிறீர்கள்... கைது செய்தாலும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்தே தீரும்: மு.கஸ்டாலின் பேச்சு

Published on 11/04/2018 | Edited on 11/04/2018


 

mkstalin


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10-04-2018) காவிரி உரிமை மீட்புப் பயணத்தை கோட்டூர் பகுதியில் முடித்து வைத்தபோது ஆற்றிய உரை விவரம்: 
 

இந்த மண் நீதியை நிலைநாட்டிய மண் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது மகன் செய்த தவறுக்காக, அவனை தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நிறுத்திய மனுநீதி சோழன் தோன்றிய மண் இந்தத் திருவாரூர் மண் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட மண்ணில் பயணம் நடத்தி, இந்தப் போராட்டம் குறித்த விளக்கங்களை, நோக்கத்தை எடுத்துச் சொல்லும் நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பாக மன்னார்குடியில் பயணம் நடைபெற்றது. என்னைப் பொறுத்தவரையில் மன்னையை கோட்டூர் வென்றதா, கோட்டூரை மன்னை வென்றதா என ஒப்பிட்டுப் பார்த்து பேசுவதை விட, இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் எடுபிடி ஆட்சியை அகற்ற ஒட்டுமொத்த தமிழகமும் திரண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 
 

காரணம், ஊழல்கள், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள், கொள்ளை என்று நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கிஞ்சிற்றும் சிந்தித்துப் பார்க்காத ஆட்சி நடப்பதுதான். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு, ஒவ்வொரு நாளும், இந்த ஆட்சி தொடருமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடக்கிறது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் நிச்சயமாக, உறுதியாக அடுத்த வினாடியே இந்த ஆட்சி அகலும் நிலை உருவாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதாவது, முதலமைச்சர் எடப்பாடியின் திறமையை, ஆற்றலை வைத்து ஆட்சி தொடரவில்லை, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து இந்த ஆட்சி நடக்கிறது. ஆட்சி நடத்தத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களுடன் தொடர்கிறதா என்றால் இல்லை. சிறிய வித்தியாசத்தில் இந்த ஆட்சி தொங்கிக் கொண்டிருக்கிறது. 
 

எனவே தான், இங்கு இரா.முத்தரசன் பேசுகையில், “பிரதமர் மோடியையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நாங்கள் நம்பவில்லை, எதிர்க்கட்சித் தலைவரான உங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம்”, என்று தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரையில், எங்களை யார் நம்புகிறீர்களோ, இல்லையோ, உங்களை நாங்கள் நம்பி இங்கு வந்திருக்கிறோம். அந்த நம்பிக்கை பெருகி வருவதால் தான், இத்தனை பெரிய கூட்டம் இங்கு கூடியிருக்கிறது. இது இங்கும், மன்னையிலும் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் இதே நிலைதான் இருக்கிறது. நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு, காவிரிப் பிரச்சினைக்காக நடத்தும் எங்களுடைய பயணத்துக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். 
 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சரியோ, தவறோ மாநில உரிமைக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகின்றன. இங்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. எனவே, இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் உறுதியோடு நான் சொல்ல விரும்புவது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வருகின்ற நேரத்தில், நிச்சயம் அப்படிப்பட்ட நிலை உருவாக்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிலை உருவானால், யாராலும் நம்மை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. நம்மிடையே உள்ள பிளவை, அரசியல்ரீதியான மோதலை எல்லாம், மத்தியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அதையெல்லாம் பயன்படுத்தி, நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 

எனவே, இதனை போக்குவதற்காக, எதிர் கட்சிகளாக இருக்கின்ற 9 கட்சிகள் இணைந்து, தொடர்ந்து பலவித போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் உணர்வு கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதி உணர்ந்து கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை. இருந்தாலும், கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை, இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கலாமா என்று கேட்டால், ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், வரும் 3 ஆம் தேதி வரை வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்கள் என்றால், கர்நாடக மாநில தேர்தல் வரையில் காலம் கடத்த மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 

இந்தநிலையில், தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கின்ற, விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்ற பிரதமர் மோடி அவர்கள் வரும் 12 ஆம் தேதியன்று சென்னைக்கு வருகிறார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அவருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சிகளின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரின் நிகழ்ச்சிக்கு சென்று, அதேபோல திரும்பி வந்து தப்பிவிடலாம் என்று கருதி விடக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் அவருக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. 
 

பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டினால், அது மோடி அவர்களுக்கு பெரும் அவமானமாகி விடும். எனவே, இதை தடுத்து விட வேண்டும் என்பதற்காக நமது கட்சிகளின் தலைவர்களை எல்லாம் இன்றோ அல்லது நாளையோ கைது செய்துவிடும் வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு எல்லாம் செய்தி வந்திருக்கிறது. எங்களை எல்லாம் கைது செய்து விட்டால், எங்களுடைய தொண்டர்கள், தோழர்கள் எல்லாம் இல்லாமல் போய்விடுவார்களா? எனவே, கைதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒருவேளை கைது செய்தால், இந்தப் போராட்டத்துக்கு இன்னும் வலு சேரும். எனவே, எப்போது கைது செய்ய வருகிறீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். 
 

சென்னையில் மறியல் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதும், மெரினாவில் 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு இருப்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் தெரிந்தும் நாங்கள் ஏற்கனவே சென்றோம் என்றால், வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிந்துதான், அதுபற்றிக் கவலைப்படாமல் நாங்கள் சென்றோம். அதற்காக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான் மாண்புமிகு எடப்பாடி மன்னிக்கவும் எடுபிடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் போட்ட வழக்கின்படி உடனடியாக எங்களை எல்லாம் கைது செய்யுங்கள், என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டுமென்றாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 
 

சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே மோடி வருகின்ற நாள் நமக்கு துக்க நாள். எனவே, துக்க நாளை வெளிப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கறுப்பு கொடி பறக்க வேண்டும். அது பறக்கத்தான் போகிறது. அதுமட்டுமல்ல, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டு மோடி அவர்கள் எந்த தைரியத்தில் இங்கு வருகிறார்? எனவே, அதை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு அன்றைய தினத்தில் அனைவரும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.

Next Story

''கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமையக் காரணமே அதிமுகதான்''- செல்லூர் ராஜூ பேச்சு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
"The reason for the construction of Klambakkam bus stand is AIADMK"-Sellur Raju's speech

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது அதிமுகதான் என  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''இன்று என்.சி.பி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை ஒரு பெரிய அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியதாக 25ஆம் தேதி டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமானது.

இந்த கடத்தலில் திமுகவுடைய சென்னை மேற்கு மாவட்ட அலுவலக அணியின் உடைய துணை அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தான் மூளையாக செயல்பட்டதாகவும், அவர்களுடைய சகோதரர் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் இணைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது என வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மக்கள் மத்தியில் நாம் விட்டுவிடுகிறோம்.  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நிறைய பேசுகிறார். அதை எல்லாம் எடிட் பண்ணி விடுகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது நாம தான். ஆனால் அதிக பேருந்துகள் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உடனடியாக நிறைவேற்றவில்லை. அதற்கான வசதிகளை எல்லாம் செய்த பிறகு தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் இவர்கள் வேக வேகமாக பஸ் நிலையத்தை திறந்து கலைஞருடைய பேருந்து நிலையம் என பெயர் வைக்கிறார்கள். திமுக ஒரு  திராவிட இயக்கத்தின் மாடல் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் எங்கே எடுத்தாலும் மதுரையில் நூலகத்திற்கு கலைஞர் பெயர், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் என எல்லாவற்றுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறார்கள். ஏன் அண்ணாவுடைய பெயரை வைக்கலாமா அல்லவா? இந்த அரசாங்கம் செய்ததா?' என்றார்.