Skip to main content

''மராட்டியத்தைவிட அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம்தான்'' - மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

mk stalin speech

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2007 முதல் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராசர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’, ‘காயிதேமில்லத் பிறை’ மற்றும் ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துவருகிறது.

 

சென்னை வேப்பேரியில் நடந்த விழாவில் அம்பேத்கர் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் என்னுடைய ஆருயிர் சகோதரர் திருமா என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் சுடர் விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன். நான் இப்போது பேசிய பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன். இதற்கு மேல் எவ்விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

 

mk stalin speech

 

எனக்கு இவ்விருதினைத் தருகிறேன் என்று சொன்னபோது, எனக்கு அச்சமிருந்தது. அம்பேத்கரின் விருதைப் பெறும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். மாநில ஆதிதிராவிட ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றை செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. என்னை மேலும் இச்சமூகத்திற்குத் தொடர் பணியை செய்ய ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளீர்கள். ‘சட்டமன்றத்தில் எனக்கென்று சாதிப் பெருமை கிடையாது. மிகமிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் நான். பட்டம் பெற்றவன் அல்ல. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிப் பள்ளியும்தான்’ என்றார் கலைஞர். கலைஞர் வழிவந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமை கொள்பவன். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என பெயரிட்டவர் கலைஞர்தான். அந்த வகையில், மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழைத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம்தான்.

 

அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதில் பெருமை. அம்பேத்கர் போல் இந்தியாவில் யாருமில்லை. முதன்முதலில் முதல்வராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார். பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார். அவருடைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இவ்வாட்சி நடைபெறுகிறது. நான் முதல்வராகப் பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். அமைச்சர்கள், அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசினேன். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். இவற்றிற்கு மேலும் 4 கூடுதல் நீதிமன்றங்கள். வன்கொடுமை நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. இம்மண்ணில் சமூக பாகுபாடுகள், பேதம் கூடாது. இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண்தான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றைப் புறம்தள்ள வேண்டும் என தொழிலதிபர்கள் மாநாட்டில் சொன்னேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான், அவர்களின் வாழ்க்கையைப் போல் என் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வேன் என உறுதிகொள்கிறேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் - பிரபலங்கள் வாழ்த்து

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Birthday Wishes to Tamil Nadu Chief Minister - Celebrities

தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் அவரது கட்சியினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். திமுக தலைமை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீண்ட ஆயுளோடும், உடல் நலத்தோடும் மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள்' என மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 'சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்' என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், விஜய், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி, பாஜக தமிழக தலைவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

'எந்த சந்தேகமும் வேண்டாம்; இங்கு தான் போட்டியிடுவேன்'- திருமா பேட்டி

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Don't be in any doubt; I will compete only here' - Mrs. Interview

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் 'சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அதிமுக இன்னும் கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அல்லது எதிர்க்கட்சி கூட்டணி இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது.

நாங்கள் கேட்டிருப்பது நான்கு தொகுதிகள். அந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதி பொதுத்தொகுதி. மூன்று தொகுதி தனித் தொகுதி என்ற கோரிக்கையை நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் 8, 10 கூட்டணிக் கட்சிகள் உள்ள ஒரு கூட்டணியில் இவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். சூழலுக்கு ஏற்ப முடிவு  செய்வோம். சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. எனவே எந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் இடம் இல்லை. இது என்னுடைய சொந்த தொகுதி. இதில் தான் நான் போட்டியிட முடியும்'' என்றார்.