Skip to main content

வாணியம்பாடியில் அரசியல் பிரமுகர் கொலை - தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண் 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

MJK member passes away case 6 persons surrender in Tanjore court

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ஆம் தேதி மஜக நிர்வாகி வசீம் அக்ரம் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன்னுடைய ஏழு வயது மகனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கொலைக்கும்பல் வசீம் அக்ரமை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வாணியம்பாடி நகரம் முழுவதும் இந்தக் கொலையால் பரபரப்பானது. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் தப்பிச்சென்ற கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடத் துவங்கினர். இந்நிலையில், கொலை நடந்த அன்று இரவு தமிழ்நாடு முழுவதும் அலார்ட் செய்யப்பட்டது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகில் போலீசார் வாகன சோதனையில்  குற்றவாளிகள் சென்ற கார் சிக்கியது. காரில் இருந்தவர்களில் சிலர் தப்பிச் சென்றனர். வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், வண்டலூர் பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஒரு கார், காருக்குள் இருந்து 11 பட்டாகத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் என்பவரின் கிடங்கில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு வசீம் அக்ரம் ரகசிய தகவல் கொடுத்ததால், கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள், 10 செல்ஃபோன்களைப் பறிமுதல் செய்தனர். அந்த வழக்கில் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக டீல் இம்தியாஸ் கேட்டுக்கொண்டதால், 8 பேர் வந்து கூலிக்காக கொலை செய்தோம் என வாக்குமூலம் தந்தனர். 

 

அவர்கள் சொன்ன தகவலின்படி மறைவாக உள்ள கொலைக் குற்றவாளிகளைப் போலீசார் தேடிவந்தனர். கஞ்சா வழக்கை சரியாக விசாரிக்கவில்லையென வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வத்துக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி மதியம் தஞ்சாவூர் ஜே.எம். நீதிமன்றத்தில் பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் ஜே.எம். 3, நீதிபதி பாரதி முன்பு வழக்கறிஞர் வீரசேகருடன் சென்று சரணடைந்துள்ளனர். இதில் செல்வகுமார், கஞ்சா பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. 

 

முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை காவல்துறையின் தனிப்படை தேடிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.