சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.
அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.