“என்ன இருந்தாலும் அந்தத் தலைமைக் காவலரை, அந்த அமைச்சரின் உதவியாளர் பொது இடத்தில் வைத்து அடித்திருக்கக் கூடாது. காவல்நிலையம் வரையிலும் புகாராகி, அமைச்சரின் உதவியாளர் மன்னிப்பு கேட்டு புகார் திரும்பப் பெறப்பட்டாலும் கூட, அந்தத் தலைமைக் காவலருக்கு அச்சம்பவம் நெருடலாகத்தான் இருந்திருக்கும்..”
-திருச்செந்தூர் வாசகர் ஒருவர் அளித்த தகவல் இது!
என்ன விவகாரம்?
திருச்செந்தூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார், முத்துக்குமார். அந்த ஊரில் உள்ள ஒரு ஓட்டல் சந்திப்பில், அரசு பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றது. காரை நிறுத்தியிருந்த தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் டிரைவரிடம், ஹெட் கான்ஸ்டபிள் முத்துக்குமார் ‘கொஞ்சம் காரை எடுங்க..’ என்று தெரிவித்திருக்கிறார். டிரைவரோ ‘இது அமைச்சரோட கார்..’ என்று மரியாதைக் குறைவாகப் பேசியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும் இச்சம்பவத்தைக் கண்டு சத்தம் போட்டார்கள். அதனைத் தொடர்ந்து டிரைவர் காரை நகர்த்தியுள்ளார்.
அடுத்த பத்து நிமிடங்களில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாவும் மேலும் இருவரும் அந்த இடத்துக்கு வந்தனர். வந்த வேகத்தில் நாகரீகமற்ற வார்த்தையால் திட்டிய கிருபா, உடன் வந்த இருவர் ஹெட் கான்ஸ்டபிள் முத்துக்குமாரின் கையைப் பிடித்துக்கொள்ள, கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். கிருபா தாக்கியதில், முத்துக்குமார் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி கழன்று கீழே விழுந்திருக்கிறது. அதன்பிறகு அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் விலக்கிவிட முத்துக்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.
புகாரான பிறகு, ‘தெரியாம நடந்திருச்சு..’ என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் ஆய்வாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு புகார் முத்துக்குமாரால் வாபஸ் பெறப்பட்டது. திருச்செந்தூர் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை நாம் தொடர்புகொண்டபோது “ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. அடிச்சவங்களே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு நான் என்ன பண்ணமுடியும்? அதான்.. புகாரை திரும்ப வாங்கிட்டேன்” என்றார் உடைந்த குரலில்.