திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் 22 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் சுமார் 1254 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதிகாரிகளை அழைத்துப் பேசினார்.
அப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகளை பெற்ற பயனாளிகளின் எந்த அளவிற்கு வீடுகளை கட்டி வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான செங்கல், மண், மணல், எம்சாண்டு, கம்பி, சிமெண்ட் உட்பட தளவாட சாமான்கள் தடையின்றி கிடைக்கிறதா என்பதைக் கேட்டறிந்ததோடு, வீடுகளின் தற்போதைய நிலைமைகள் என்ன என்று கேட்டார். அதற்கு, அதிகாரிகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் ஆணைகளை பெற்ற பயனாளிகளில் 675 பேர் பேஸ்மட்டம் முடித்துள்ளனர். 178 பேர் பேஸ்மட்டம் முடித்து லிண்டல் அளவிற்கு வீடுகள் கட்டி வருகின்றனர். 15 பேர் தங்கள் வீடுகளுக்கு மோல்டு போட்டு முடித்துள்ளனர். 8 பேர் வீடுகளை முடிக்கும் அளவிற்கு துரிதமாக பணிகளை முடித்துள்ளனர் என்றார்கள்.
அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர் பெரியசாமி, துரிதமாக பணியாற்றி கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகளைப் பெற்ற பயனாளிகள் விரைவில் குடியேறும் அளவிற்கு பணிகளைத் துரிதப்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் உட்பட சில கட்சிப் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.