புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 300 குடும்பங்களுக்கானக் குடியிருப்பு கட்டுவதற்காக நிலம் தேர்வு செய்ய சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் அதிகாரிகள் தனியார் மற்றும் அரசு நிலங்களைப் பார்வையிட்டனர்.
அந்த இடங்களுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை என மாற்று இடங்களைத் தேர்வு செய்ய வலியுறுத்திச் சென்றனர். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், திருவரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் கட்சி பிரமுகர்களுடன் சென்றனர். அங்கே விளையாட்டு திடலில் மரக்கன்றுகளை நட்ட பிறகு கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்த பேட்டை வாங்கி கிரிக்கெட் விளையாடினார்.
அதைத் தொடர்ந்து வீசப்பட்டப் பந்துகளை லாவகமாக அடித்தார். அவரது கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து இளைஞர்கள் உற்சாகமானார்கள். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன பந்து வீச திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேட்டிங் செய்தார். இதனைப் பார்த்து இளைஞர்கள் உற்சாகமடைந்து சுழற்கோப்பையுடன் குழு போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.
"இளைஞர்கள், மாணவர்கள் படிப்போடு சேர்த்து விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.